|
இரண்டாம் பாகம்
4220.
ஆடல் மிக்க அறபி யெனுங்குலத்
தூடு தித்த வுழைய ருவப்புறத்
தேடி வன்றிறல் தீனின் முகம்மதை
வீடல் செய்திவண் மீள்குவ னியானென்றே.
43
(இ-ள்) போர்த்தொழிலால்
மேன்மைப்பட்ட அறபியென்று சொல்லுங் கூட்டத்தினது மத்தியி லவதரித்த உழையோர்கள் மகிழ்ச்சியடையும்
வண்ணம் நான்கொடிய வலிமையையுடைய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைக் கொண்ட அந்த முகம்மதென்பவனை
விசாரித்துக் கொன்று விட்டு இங்குத் திரும்பிவருவே னென்று.
4221.
கூறி னானெழுந் தான்கொடு மைக்குறித்
தூறி நீர்த்தட முமல ரோடையு
நீறு பாலையு முல்லையு நீந்தியே
யீறில் தீனர்து யிலிட மெய்தினான்.
44
(இ-ள்) சொல்லி யெழும்பித்
தனது மனத்தின்கண் தீமையை மதித்துச் சுரக்கா நிற்கும் புனலைக் கொண்ட வாவிகளையும் புஷ்பங்களையுடைய
ஓடைகளையும் நீறிய பாலை நிலங்களையும் முல்லை நிலங்களையுந் தாண்டி முடிவில்லாத தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம் மார்க்கத்தையுடைய சஹாபாக்கள் நித்திரை செய்கின்ற அந்தத் தானத்தில் வந்து சேர்ந்தான்.
4222.
சேனை முற்றுந் தெரிவுற நோக்கினா
னான முற்ற நபியுழை வாளைவைத்
தூன கற்றி யுறங்குதல் கண்டன
னீ்ன முற்ற விழிதொழிற் செய்கையான்.
45
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த குற்றத்தைப் பொருந்திய
தாழ்ந்த தொழிலாகிய செயலையுடைய அவன் அந்தச் சைனியங்கள் முழுவதையுந் தெரியும்படிப் பார்த்துக்
கஸ்தூரி வாசனை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்கள் வாளாயுதத்தைப் பக்கத்தில் வைத்து விட்டு
ஊனையொழித்து நித்திரை செய்வதைப் பார்த்தான்.
4223.
சிந்தை நன்கருள் கூர்ந்து திறன்மிகு
மந்த வீரர னைவரை யுங்கடந்
திந்து நேரிற சூல்கண் வளரிடம்
வந்து வந்து மனத்தினி னுன்னினான்.
46
|