|
இரண்டாம் பாகம்
4252.
மதந்தி றந்தொழு கிருகவுட் புகர்முக மலைபோல்
விதம்பெ றும்வரி யுடல்வளை யுகிர்வியாக் கிரம்போற்
கதந்த ருமுடங் குளைநெடு வாலரிக் கணம்போற்
பதம்பெ யர்த்தழ கொடுநடந் தனர்வயப் படைஞர்.
75
(இ-ள்) அவ்வாறெழும்ப,
வெற்றியைக் கொண்ட சேனை வீரர்கள் மதமானது துறந்து பாயா நிற்கும் இருகதுப்பினையும் புள்ளிகள்
பொருந்திய முகத்தினையு முடைய மலையைப் போன்ற யானைகள் போலவும், பல தன்மையைப் பெற்ற
இரேகைகள் தங்கிய சரீரத்தையும் வளைந்த நகங்களையு முடைய புலிகளைப் போலவும், கோபத்தைத் தராநிற்கும்
மடங்கிய புறமயிரையும் நீண்ட வாலையு முடைய சிங்கக் கூட்டங்களைப் போலவும், தங்களது பாதங்களைப்
பூமியை விட்டும் பெயர்த்து அழகுடன் நடந்தார்கள்.
4253.
வாய்ந்த நீண்டகந் தரத்தின செறிதரு மயிரின்
வேய்ந்த கூன்புறத் தினபிடர் மதத்தின விரிந்து
சாய்ந்த வாலின கவையடிச் சுவட்டின தளரா
தேய்ந்த மெய்யின வொட்டைகள் விரைந்தன வெழுந்தே.
76
(இ-ள்) அவர்கள் அவ்வாறு
நடக்க, சிறந்த நீட்சியைக் கொண்ட கழுத்தை யுடையவைகளும், நெருங்கிய உரோமங்களினால் மூடப்பட்ட
வளைந்த முதுகையுடையவைகளும், புறங்கழுத்தி னிடத்து மதத்தை யுடையவைகளும், பரந்து சரிந்த வாலை யுடையவைகளும்,
பிளந்த காற்சுவட்டையுடையவைகளும், மெலியாது பொருந்திய சரீரத்தை யுடையவைகளுமான ஒட்டகங்கள்
எழும்பி வேகமாகச் சென்றன.
4254.
திரண்ட கூர்மருப் புடையவல் விடையினத் திரளு
முரண்ட யங்கிய வேசரிக் குலம்பல முழுது
மிரண்டு பாலினுஞ் சுமைபொறுத் தணியணி யெழுந்த
குரண்ட மேவிய படுகரு மடவியுங் குறுக.
77
(இ-ள்) அவ்வாறு செல்ல,
கொக்குகள் தங்கிய குளங்களையுஞ் சோலைகளையுந் தாண்டிச் செல்லும் வண்ணம் திரட்சியுற்ற கூர்மை
பொருந்திய கொம்புகளையுடைய வலிமையைக் கொண்ட எருதுகளி னினமாகிய கூட்டமும், வலிமையானது பிரகாசியா
நிற்கும் பல கோவேறு கழுதைகளின் கூட்டமுமாகிய யாவும் இருமருங்கிலும் பாரங்களைத் தாங்கிக் கொண்டு
வரிசைவரிசையாக வெழும்பிச் சென்றன.
|