பக்கம் எண் :

சீறாப்புராணம்

1545


இரண்டாம் பாகம்
 

இதயத்தையுடையவர்களான சத்துராதிகள் தங்கள் சரீரமும் மனமுங் குன்றி நிற்கும் வண்ணம் அவர்கள் செய்த தீங்குகளை மன்னித்து அவர்களுக்கு நன்மையுற்ற சுகத்தைக் கொடுத்தால் அதனால் அவர்களது அன்பானது அதிகமாகும்.

 

4249.  ஆதி யோன்மு னருளிய வாய்மைசேர்

     நீத வேத நெறிமுறை நின்றுநா

     மேத மேபொறுத் தின்றுவிட் டாலவன்

     சூதும் பொய்மன நன்மையுஞ் சூழுமால்.

72

     (இ-ள்) ஆதலால் யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவானவன் ஆதியில் தந்த சத்தியத்தைப் பொருந்திய நியாயத்தைக் கொண்ட புறக்கானுல் கரீமென்னும் வேதத்தினது சன்மார்க்க ஒழுங்கில் நின்று நாம் இன்று அவனது குற்றங்களை மன்னித்து அவனை விட்டுவிட்டால் அவனது வஞ்சகமும் அசத்தியத்தையுடைய இதயத்தினது நன்மையும் ஒன்றாகச் சூழும்.

 

4250.  என்னு நன்மொழி யின்னன பன்னியே

     யன்ன வன்றுய ராற்றிச் செலவிடுத்

     துன்னு தோழ ருடனெழுந் தொல்லையின்

     மன்னு கானக நீங்கி வழிக்கொண்டார்.

73

      (இ-ள்) என்ற நன்மை பொருந்திய இத்தன்மையான சமாச்சாரங்களைச் சொல்லி அந்தக் காபிரினது துன்பத்தை யொழித்து அவனைத் தன்னூருக்குப் போகும்படி யனுப்பி விட்டு நெருங்கிய தங்களது நேசர்களோடு மெழும்பி விரைவில் தாங்கள் தங்கிய அக்காட்டை விட்டுப் பயணப் பட்டார்கள்.

 

கலிநிலைத் துறை

 

4251.  வால்கு ழைத்தெழில் வளைநெடு மாமுகங் கோட்டிக்

     கால்வ ளைத்திரு செவிநிமிர்த் துந்துகந் துகங்கள்

     சூல்ப டைத்தமை வரைநிகர் துணைப்புய வேந்தர்

     மேல்வ ரப்பரித் தெழுந்தன வளியினும் விரைவின்.

74

      (இ-ள்) அவ்வாறு பயணப்பட, தங்களது வால்களைக் குழைத்து அழகைக் கொண்ட வளைந்த நீட்சியையுடைய பெருமை பொருந்திய முகங்களை வளைத்துக் கால்களை மடக்கி இருகாதுகளையும் நிமிரச் செய்து தாவா நிற்குங் குதிரைகள் கருப்பத்தைப் பொருந்திய மேகங்கள் தங்கிய மலைகளையொத்த இருதோள்களையுடைய அரசர்களான அசுஹாபிமார்கள் தங்கள் மீது ஏறிவர அவர்களைத் தாங்கிக் கொண்டு காற்றைப் பார்க்கிலும் வேகமா யெழும்பின.