பக்கம் எண் :

சீறாப்புராணம்

1678


இரண்டாம் பாகம்
 

பனீகுறைலாவதைப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4622. இனையன மகிழ்வு மெய்த விருந்தனர் மற்றை நாளிற்

     புனைமலர்த் தடத்தின் மூழ்கிச் சிரசிடம் புலர்த்துங் காலைப்

     பனியறச் சோதி காலும் பருதியு மதியு மேய்ப்பத்

     தனியவ னருளா லொல்லை சபுறயீ லவணின் வந்தார்.

1

     (இ-ள்) இத்தன்மையான மகிழ்ச்சியும் வந்து சேர, அந்தத் திருமதீனமா நகரத்தின்கண் ணிருந்தவர்களான நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அடுத்த தினத்தில் புஷ்பங்களா லலங்கரிக்கப்பட்ட ஓர் வாவியின்கண் ஸ்நானஞ்செய்து தலையின் தானத்தைப் புலர்த்துகின்ற சமயத்தில், அங்கே பனியானது அற்றுப் போகும் வண்ணம் ஒளிவைப் பிரகாசியா நிற்கும் சூரியனுஞ்சந்திரனும் ஒப்பாகும்படி ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்கள் ஏகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் திருவருளினால் வேகமாய் வந்தார்கள்.

 

4623. வேதநன் னபியே மெய்ப்புகழ் நபியே வாய்ந்த

     மேக நீழல் சிறந்திடு நபியே தீனின்

     மாதவ நபியே மன்னும் வானவர் நபியே யீறி

     லாதிநன் னபியே கேண்மி னெனமொழி யருளிக் கூறும்.

2

     (இ-ள்) அவ்வாறு வந்து புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய நமது நபியே! ஓங்கா நிற்கும் உண்மையான கீர்த்தியையுடைய நபியே! மேகத்தின் நிழலானது பொருந்திய காந்தியைத் தரும் வண்ணம் கவிகையாகச் சிறக்கா நிற்கும் நபியே! தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய மகா தவத்தைக் கொண்ட நபியே! நிலைபெற்ற தேவர்களான மலாயிக்கத்து மார்களது நபியே! முடிவற்ற யாவற்றிற்கு முதன்மையனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் நபியே! கேட்பீர்களாக என்று சொல்லி அப்பாற் சொல்லுவார்கள்.

 

4624. எல்லையி லமரரி யாரு மியானும்பீ சபீலுக் காக

     வல்லவ னருளால் கட்டுங் கச்சையும் வடிவே லியாவு

     மொல்லையின் மறுத்தி டாதிங் கடைந்தன மும்மோ டுற்ற

     வில்லயிற் படையு நீரு மிருந்ததென் வெறிதி னம்மா.

3