இரண்டாம்
பாகம்
4778. இன்ன
வாசகங் கேட்டித யம்மகிழ்ந்
துன்னி யற்பமண் ணள்ளி
யுமிழ்ந்திதை
யன்ன நோயற் கருளென்
றளித்தனர்
பொன்னின் வார்கழல்
போற்றிக்கொண் டேகினான்.
17
(இ-ள்)
இத்தன்மையான சமாச்சாரத்தை அந்த நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது
மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்று மனமானது
மகிழ்ச்சியடைந்து யோசித்துக் கொஞ்ச மண்ணைக்
கையினால் வாரி அம்மண்ணில் வாயினது உமிழ்நீரை
யுமிழ்ந்து இதை அந்த மேகவியாதிக்காரனுக்குக்
கொடுவென்று கொடுத்தார்கள். அவன் பொன்னினாற்
செய்யப்பட்ட பெரிய வீரக்கழலைத் தரித்த அவர்களது
பாதங்களைத் துதித்துக் கொண்டு சென்றான்.
4779. உயிர்த
ருமருந் தாமென் றுதவநோய்
பயிலு மன்னவன் பார்த்து
மறைநபி
செயிரி றாளினை
சிந்தித்து நோய்செயுந்
துயர மும்பய முந்துரந்
தேகவே.
18
(இ-ள்)
அவ்வாறு சென்ற அவன் இது பிராணனை யருளுஞ்
சஞ்சீவியாகுமென்று கொடுக்க, நோயினால் பழகப்பட்ட
அவன் அதைப் பார்த்துப் புறுக்கானுல் மஜீதென்னும்
வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களது குற்றமற்ற திருவடிகளை நினைத்து
அம்மேகவியாதியானது செய்கின்ற துன்பமும் அச்சமும் ஓடிப்
போகும் வண்ணம்.
4780. அண்ணல்
வாயுமிழ் நீரோ டளித்திடு
மண்ணை நீரிற்
கரைத்து மனத்தில்வே
றெண்ண மின்றி பிசுமி
லுரைத்தெடுத்
துண்ண நல்லுரு வெய்தின
ணுண்மையோன்.
19
(இ-ள்)
சத்தியத்தையுடையவனான அந்த நோயாளி பெருமையிற்
சிறந்தோர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் தங்கள் வாயினாலுமிழ்ந்த நீருடன்
கொடுத்த அந்த மண்ணை நீரிற்கரைத்து இதயத்தின் கண்
வேறு சிந்தனையில்லாமல் பிஸ்மில்லா ஹிர்றஹ்மா
னிர்றஹீ மென்று சொல்லி எடுத்து அருந்த, நல்ல
வடிவத்தைப் பெற்றான்.
|