பக்கம் எண் :

சீறாப்புராணம்

1737


இரண்டாம் பாகம்
 

முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குச் சொல்லென்று சொல்ல, தகுதியான அந்தத் தூதுவன் வேகமாய்ப் போய் அந்த நபிகட் பெருமானாரவர்களது நன்மையைக் கொண்ட பாதங்களில் வணங்கி நின்று புகழ்ந்து.

 

4774. மேக நோவு மிகுத்து வெளுவெளுத்

     தாக முற்று மனலெனக் காந்திநீர்த்

     தாக மீறித் தவிப்பு மிளைப்புமாய்ச்

     சோக மெய்தித் துயரிற் றுளங்கியே.

13

     (இ-ள்) மேக நோவானது அதிகரித்து உடம்பு முழுவதும் மிகவும் வெளுத்து நெருப்பைப் போல உட்டணித்துத் தண்ணீர்த்தவன மிகவாகத் தவிப்பு மிளைப்புமாய்ச் சோம்புதலுற்று வேதனையினாற் கலங்கி.

 

4775. தடைய றாப்புன றங்கிய வேரியின்

     மடைதி றந்து வரும்வனம் போலவு

     மிடைவி டாது சொரியினு மீடுபட்

     டுடையும் பாண்டத் துதகமு மாகியே.

  14

     (இ-ள்) தடை நீங்காத நீரானதுறைந்த தடாகத்தின் மடையைத் திறந்து வருகின்ற நீரைப் போலவும், இடைவிடாமல் சொரியினும் துன்பப்பட்டு உடைந்த பாத்திரத்தின் சலமுமாகி.

 

4776. உரத்தை மாற்றியுள் ளூனை யுருக்கிக்கா

     தரத்தை நல்குஞ் சலக்கழிச் சற்பிணி

     வருத்த வைகலும் வாடி மயக்கமுற்

     றொருத்த னாவியுண் டில்லையென் றோய்ந்தனன்.

15

     (இ-ள்) வல்லமையை யகற்றிச் சரீரத்தினுள் ளிருக்கின்ற ஊனையுருகச் செய்து அச்சத்தைக் கொடுக்கும் நீரிறக்கமாகிய நோயானது வேதனை செய்ய, பிரதி தினமும் மெலிந்து மயக்கமடைந்து ஒருவன் தனது பிராணனானது உள்ளது? இல்லதென்று தளர்ந்தான்.

 

4777. வைய மீது மழைகுடை யாய்வரப்

     பைய ராவு பகரக் கிருபைசெய்

     யைய னேயவ னாருயிர்க் கின்னருள்

     செய்ய வேண்டு மெனமொழி செப்பினான்.

16

     (இ-ள்) ஆதலால் இவ்வுலகத்தின் மீது மேகமானது கவிகையாய் வரவும், படத்தைக் கொண்ட சர்ப்பமானது பேசவுங் கருணை செய்த குருவாகிய நபிகட் பெருமான் நபி சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே! அவனது அருமையான பிராணனுக்கு இனிய கிருபை செய்ய வேண்டுமென்று சொன்னான்.