பக்கம் எண் :

சீறாப்புராணம்

1770


இரண்டாம் பாகம்
 

செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து அவர்களுக்கு முன்னாக உட்கார்ந்து நல்ல சமாச்சாரங்களைப் பேசிக் கொண்டிருக்கின்ற சமயத்தில், பற்பல காபிர்கள் கூடிய பாசறையாகிய வீட்டின்கண் ணிருந்த கல்வி நூல்களைக் கற்ற அறிவினால் மேன்மைப்பட்ட சுகையிலென்று ஒருவன் வந்து சேர்ந்தான்.

 

4874. துதித்தவ ணடுத்து நின்ற சுகயிலைக் கண்டு வள்ளன்

     மதித்திவன் வருத லாலே காபிர்க்கோர் வருத்த மில்லைப்

     பதித்திவ னாம சாரம் பார்த்திடி லேசாந் தூதாய்க்

     கதித்திவன் றன்னை விட்டோர் கருமமு மிலேச தாமே.

76

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து புகழ்ந்து, அங்கே சமீபித்து நின்ற அந்தச் சுகையிலென்பவனை வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்தி முல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்து மதிப்பிட்டு இவன் வந்ததினால் காபிர்களுக்கு ஒரு துன்பமுமில்லை. இவனது நாமசாரத்தை அழுத்திப் பார்த்தால் அது இலேசாகும். இவனைக் கதித்துத் தூதாக விட்டவர்களது காரியமு மிலேசாகும்.

 

4875. சொற்பொருண் முகம்ம தாய்ந்து சொல்லிட சுகயி லென்போ

     னற்புதர் தம்மை நோக்கி யறைகுவ னிருவ ருக்கும்

     விற்பன மாகச் செய்ய வேண்டுகா ரியங்கட் கெல்லா

     முற்பன மாகச் சீட்டொன் றெழுதுத லுறுதி யென்றான்.

77

      (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அவ்வார்த்தையினது அருத்தத்தை ஆராய்ந்து சொல்ல, அந்தச் சுகையிலென்பவன் அற்புதத்தையுடையவர்களான அந்நபிகட் பெருமானாரவர்களைப் பார்த்துச் சொல்லுவான். நம்மிருவருக்கும் விந்தையாகச் செய்ய வேண்டிய கருமங்களெல்லாவற்றிற்கும் உற்பனமாக ஒரு சீட்டெழுதுவது திடனென்று சொன்னான்.

 

4876. ஆமென மகிழ்ச்சி யாகி யகுமது மலியார் தம்மைத்

     தாமரு ளுடனே கூவி யெழுதெனச் சாற்று கின்றார்

     கோமுறை வழுவா நீதி குலவிய அலியா ரப்போ

     தேமநற் புகழீர் சீட்டி லெழுதுவக் கணையே தென்றார்.

78