பக்கம் எண் :

சீறாப்புராணம்

1798


இரண்டாம் பாகம்
 

4945. தடவரைக் குடுமியிற் சார்ந்த மாற்றலர்

     புடைபடு மருவியின் வதிந்த பூபமுண்

     டிடைபடு மின்னலுற் றிருக்குங் காலையின்

     மடமைசேர் காபிரி லொருவன் வந்தனன்.

34

      (இ-ள்) அவர்கள் அவ்வாறிருக்க அப்பெரிய மலையினது  முகட்டில் தங்கிய சத்துராதிகளான அந்தக் காபிர்கள் பக்கத்திலுற்ற அருவியில் தங்களிடத்திருந்த அப்பவருக்கங்களை யருந்தி இடைதற் பொருந்திய துன்பத்தை யடைந்திருக்கின்ற சமயத்தில், அறியாமை சேர்ந்த காபிர்களில் ஒரு காபிர் அங்கு வந்தான்.

 

4946. மாறுகொண் மனத்தினர் வதன நோக்கிநின்

     றேறுகோ ளரியிவ னாரென் றோதிடக் 

     கூறினர் புலரியிற் றொடுத்துக் கொற்றவெவ்

     வீறுடை விற்குனித் தடர்ந்து விட்டனன்.

35

      (இ-ள்) அவ்வாறு வந்து விரோதத்தைக் கொண்ட இதயத்தையுடையவர்களான அந்தக் காபிர்களது முகத்தைப் பார்த்து நின்று ஆண்டன்மையைக் கொண்ட சிங்கமாகிய இவன் யாவன்? என்று கேட்க, அவர்கள் சொன்னார்கள். விடியற்கால முதலாக விஜயத்தைக் கொண்ட வெவ்விய பெருமையையுடைய கோதண்டத்தை வளைத்து நெருங்கி அம்புகளை விட்டான்.

 

4947. விட்டவக் கணைகளான் மெலிந்து மன்னவர்

     பட்டன ரறுவரப் பரந்த லையின்மேன்

     மட்டிலாக் காயத்தின் வதைக்கின் றாரவர்

     தொட்டணி கலன்களுந் தொடர்ந்து பற்றினான்.

36

      (இ-ள்) அவ்வாறு விட்ட அந்த அம்புகளினால் அரசர்கள் மாண்டார்கள். ஆறு பேர்கள் அந்தப் பாடி வீட்டின் மீது அளவற்ற காயத்தினால் வதைக்கின்றார்கள். அவர்கள் கைகளால் தொட்டுப் பூண்ட ஆபரணங்களையும் பின்பற்றிக் கைக் கொண்டான்.

 

4948. வீரரை வீழ்த்தியந் நிரையுங் கொண்டிவண்

     டார்பெறு மெமரையுந் தடிய வென்றுவந்

     தேர்பெறு கூற்றென விருக்கின் றானிவன்

     சீர்பெறு திறலினைச் செப்ப வல்லதோ.

37

      (இ-ள்) அவ்வாறு அந்த வீரர்களை வீழும்படி செய்து அந்தப் பசுக் கூட்டங்களையுங் கைக் கொண்டு மாலையைப் பெற்ற எங்களையுங் கொல்ல வேண்டுமென்று இங்கே வந்து அழகு பொருந்திய எமனைப் போல இருக்கின்றான். இவனது கீர்த்தி பொருந்திய வல்லமையைச் சொல்ல வன்மையாகும்.