பக்கம் எண் :

சீறாப்புராணம்

281


முதற்பாகம்
 

ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் பூமியின்மேற் பொருந்திய பாதையினது முன்னால் நடக்கவும், நெடியோனான ஜல்லஷானகுவத்த ஆலாவின் நபியாகிய முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நீட்சி தங்கிய அப்பாதையின் பின்னால் நடக்கவும், வாசனையுற்ற மார்பினையுடைய மற்றும் யாவர்களுமொருவரோடொருவர் கலந்து அதன்பின் நடந்தார்கள்.

 

     703. கானந்தனி லேகிய காலையினிற்

        றானந்தரு தாரை தனைத்தெரியா

        தீனந்தரு வல்லிரு ளெய்திநெடு

        வானுந்தெரி யாது மறைத்ததுவே.

4

     (இ-ள்) அவ்வாறு யாவர்களுங் காட்டினிடமாகப் போய்ச் சேர்ந்த சமயத்தில் கண்ணாற் காணக்கூடிய தரிசனத்தைத் தராநின்ற பாதையானது தோற்றாது குறைபாட்டை யுண்டாக்கா நிற்கும் வலிய அந்தகாரமானது எவ்விடத்திலும் பொருந்தி நீட்சியுற்ற ஆகாயந் தெரியாது மறையும்படி செய்தது.

 

     704. இருள்கொண்டு பரந்திட யாவருமோர்

        மருள்கொண்டவர் போல மயங்கினரா

        லருள்கொண்ட முகம்மது மன்புறவே

        தெருள்கொண்டு நடந்தனர் செல்வழியே.

5

     (இ-ள்) அவ்விதம் அந்தகாரமானது எவ்விடமும் பற்றிப் பரவிட அங்குற்ற யாவர்களும் ஒப்பற்ற உன்மதங் கொண்டவர்களைப் போல மயக்கமுற்றார்கள். அந்தச் சமயத்தில் அன்பு பொருந்தும்படி அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் திருவருள் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களும் செல்லாநின்ற பாதையின்கண் தெளிவுற்று நடந்தார்கள்.

 

     705. கொடுவல்லிரு ளுண்டு கொழுங்கதிர்பைங்

        கடலந்தரை மீதெழு காரணமுற்

        றிடருந்தவி ரும்மிவ ராலெனவே

        மடனெஞ்சமி லாது மகிழ்ந்தனரே.

6

     (இ-ள்) அப்போது அங்குற்ற யாவர்களும் இந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களால் செழிய சூரியனானவன் கொடுமைதங்கிய இந்தவலிய அந்தகாரத்தை விழுங்கிப் பசுமை பொருந்திய கடலினையுடைய அழகிய இப்பூமியின் மீது எழாநின்ற காரணமுண்டாகி நமது துன்பங்களும் நீங்கிவிடுமென்று சொல்லி உன்மதங் கொண்ட அகமானது ஒழிந்து சந்தோஷமடைந்தார்கள்.