பக்கம் எண் :

சீறாப்புராணம்

329


முதற்பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு அடுத்து, தாழ்ந்த நிலமும் பசிய சோலையும் வெள்ளிய மணலினது பரப்புமுள்ள ஒருஸ்தலம் அந்த ஸ்தலத்தின்கண் உரவோர்களான அவ்வியாபாரிக ளனைவரும் தங்கியிருந்தார்கள். அப்போது ஒருவன் வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் சந்நிதானத்தில் வந்து மலைகளையுடைய இந்தக் காட்டில் திருடர்க ளுண்டென்று சொல்லுஞ் சந்தேகம் முதலியவைகளை யான் கண்களினாற் கண்டேனென்று சொன்னான்.

 

844. இருந்த வவ்வையிற் கள்ளருண் டெனுமொழி யிசைப்பத்

    தெரிந்து கண்டன மென்றனர் சிலர்சிலர் திகைத்தார்

    விரிந்த செங்கதி ரோனுமேற் றிசையினிற் புகுந்தான்

    வருந்த லென்றவர்க் குரைத்தனர் புகழ்முகம் மதுவே.

4

     (இ-ள்) அவ்வண்ணம் அனைவர்களுந் தங்கியிருந்த அந்த ஸ்தலத்தின்கண் திருடர்களுண்டென்னும் வார்த்தையை அவன் கூறச் சில பேர்கள் அதையறிந்து நாங்களும் கண்களினாற் பார்த்தோமென்று சொன்னார்கள். அவ்வார்த்தையைக் காதுகளினாற் கேள்வியுற்று சில பேர்கள் மனசின்கண் பயமடைந்தார்கள். அப்போது விசாலித்த சிவந்த கிரணங்களையுடைய சூரியனும் மேற்குத் திக்கினில் போய்ச் சேர்ந்தான். கீர்த்தியையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்குற்ற யாவர்களுக்கும் நீங்கள் திருடர்களை மனசின்கண் நினைத்து வருத்தப்படாதீர்களென்று சொன்னார்கள்.

 

845. சோர ருண்டென மனந்துணுக் குறல்சுடர் வரையி

    னேர தாயொரு நதியுள நிலஞ்சுழித் தெழுந்து

    கோர மாய்வருங் கள்ளருங் குறுகிடா ரெனவே

    காரெ ழுங்குடை முகம்மது கனவுகண் டனரே.

5

     (இ-ள்) அப்போது மேகமானது எழும்பா நிற்கும் குடையினை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களது நித்திரையில் திருடர்களுண்டென்று சொல்லி நீங்கள் மனமச்சப்பட வேண்டாம்? பிரகாசம் பொருந்திய இந்த மலையின் நேராக ஓராறுண்டு அவ்வாறானது பூமியைச் சுழித்தெழும்பி விரைவாய் வரும் அதனால் உங்களைத் திருடர்கள் நெருங்க மாட்டார்களென்று சொப்பனத்தைக் கண்டார்கள்.

 

846. கனவின் செய்தியை யவரவர்க் குரைத்திடுங் காலைத்

    தினக ரன்குணக் கெழுந்தன னதிசுழி கிளறி

    வனம டங்கலும் வகிர்ந்தெடுத் திருகரை வழிந்திட்

    டினம ணிக்கருங் கடல்வயி றிடைமடுத் ததுவே.

6