முதற்பாகம்
கள்வரை நதிமறித்த படலம்
கலிநிலைத்துறை
841.
பருதி வானவன் செங்கதிர்
பரந்திடத் துயின்றோ
ரெருது வாம்பரி யொட்டகம்
பரந்திட வெழுந்து
முருகு லாவிய
பொழில்கடந் தருநெறி முன்னித்
திருகு வெஞ்சினக்
களிறென நடந்தனர் செறிந்தே.
1
(இ-ள்)
வட்ட வடிவையுடைய சூரியனுதையமாய்ச் சிவந்த பிரபையானது எவ்விடமும் விசாலித்திட நித்திரை செய்தவர்களாகிய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முதலிய மற்ற வியாபாரிகளனைவரும் எழும்பி இடபங்களும்
தாவா நிற்கும் குதிரைகளும் ஒட்டகங்களும் பரவிடும்படி வாசனையானது உலாவப் பெற்ற அந்தச் சோலையை
விட்டுந் தாண்டி அரிதாகிய பாதையை அடுத்து மாறுபட்ட வெவ்விய கோபத்தையுடைய யானையைப் போல
ஒருவர்க்கொருவர் நெருங்கி நடந்து சென்றார்கள்.
842.
சிறுபொ ருப்படர்ந்
தடவிக ளுரைநெறி சேர்ந்து
வறுப ரற்படர் பாலைக
ணீந்திமுள் வகிர்ந்திட்
டறல்கொ ழித்திடுங்
கானையா றுகள்கடந் தகன்று
குறைவில் சந்தகில்
செறிநெடு வரைகுறு கினரே.
2
(இ-ள்)
அவ்விதம் நடந்து சென்ற அவ்வியாபாரிக ளனைவரும் சிறிய மலைகள் நெருங்கிக் காடுகள் தங்கிய
பாதைகளைப் பொருந்தியுலர்ந்த பருக்கைக் கற்களை பரவிய பாலை நிலங்களைக் கடந்து முட்களையறுத்துக்
கரிய மணல்களைக் கொழிக்காநின்ற காட்டாறுகளைத் தாண்டி யகன்று சென்றுக் குறைவில்லாத சந்தன
மரங்களும் அகில்மரங்களும் நெருங்கிய நெடிய ஒரு மலையைப் போய் அடுத்தார்கள்.
843.
பள்ள மும்பசுஞ்
சோலையும் வெண்மணற் பரப்பு
முள்ள தோரிட மவ்வையி
னுறைந்தன ருரவோர்
வள்ள றன்னிடத் தொருவன்வந்
திவ்வரை வனத்திற்
கள்ள ருண்டெனு
மசுகையுங் கண்டன னென்றான்.
3
|