முதற்பாகம்
839.
சிந்தை தேங்கிட
வழுதவர் தங்களைத் தேற்றி
மைந்த ரியாவருந் திரண்டெழு
மணத்துட னெடுத்துக்
கந்த மென்மலர்
கமழ்ந்திட வடக்கினர் கபீபு
மந்த மில்லவன்
றனைப்புகழ்ந் தேத்தின ரன்றே.
54
(இ-ள்)
அவ்வாறு மனமானது அஞ்சிடும்படி அழுதயாவர்களையுந் தேரும்படி செய்து அங்குற்ற புருடர்களனைவருமொன்று
சேர்ந்து இசுறாவென்னும் அப்பண்டிதனை எழாநிற்கும் பரிமளத்துட னெடுத்து மணத்தையுடைய மெல்லிய
புஷ்பங்கள் வாசனை வீசிடும்படியாக அடக்கஞ் செய்தார்கள். பின்னர் ஹபீபென்னுங் காரணப் பெயர்
பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனத்தினாற் கடைகண்டறிதற் கரியவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவைத் துதித்து வணங்கினார்கள்.
840.
முதிய கேள்வியன்
சடங்குள தெவ்வையு முடிப்பக்
கதிர வன்கதி
ரொடுக்கிமேற் கடலினிற் சார்ந்தான்
மதிவிண் ணெய்திட
வசிகரு முகம்மது மகிழ்வா
யுதிரு மென்மலர்ச்
சோலைபுக் குறங்கின ரன்றே.
55
(இ-ள்)
அப்போது முதுமையான கல்விகளையுடைய அவ்விசுறாவென்னும் பண்டிதனுக் குள்ளனவாகிய கிரியைகளனைத்தையும்
முடிக்கும்படி சூரியன் தனது கிரணங்களெல்லாவற்றையு மொடுக்கிக் கொண்டு மேற்பாற் சமுத்திரத்தின்கண்
போய்ச் சேர்ந்தான். பின்னர் சந்திரன் ஆகாயத்திற் பொருந்திடவே வசிகராகிய அவ்வியாபாரிகளும்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் மனச்சந்தோஷமாய் மெல்லிய புஷ்பங்களை யுதிராநிற்கும்
அச்சோலையின் கண்போய் அன்றிரவு நித்திரை செய்தார்கள்.
|