பக்கம் எண் :

சீறாப்புராணம்

326


முதற்பாகம்
 

836. வரிசை வள்ளற னிணையடிச் செழுமல ரதனைச்

    சிரசு றப்பணிந் திருவிழி மணிகளாற் றேய்த்து

    மரும லர்க்குழன் மனையவர்க் குறுமொழி வகுத்துத்

    தரையி னிற்புகழ் பெறும்படி யணைமிசை சாய்ந்தான்.

51

     (இ-ள்) அன்றியும், சங்கைபொருந்திய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் இருபாதங்களாகிய செழிய தாமரைப் புஷ்பங்களைத் தனது தலையானது பொருந்தும்படித் தாழ்ந்து இரண்டு கண்களின் மணிகளாலும் துலக்கி வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலைப் பெற்ற பெண்களையுடைய தன் வீட்டிலுள்ள அனைவர்களுக்கும் பொருந்திய வார்த்தைகளை வகைப்படுத்திச் சொல்லி இப்பூமியின்கண் கீர்த்தியை யடையும்படி மெத்தையின் மேற்சரிந்தான்.

 

837. துணைவ ருமுயிர்த் துணைவியும் புதல்வருஞ் சூழப்

    பணர்வி ரிந்தன கேளிரும் பாங்கினி லிருப்ப

    மணமெ ழும்புய வள்ளலை யடிக்கடி வாழ்த்தி

    யணையின் மீதினிற் சாய்தலும் விண்ணுல கடைந்தான்.

52

     (இ-ள்) அவ்வாறு சரிந்த இசுறாவென்னும் அப்பண்டிதன் தனது சகோதர்களும் சகோதரிகளும் உயிர்போன்ற நாயகியும் புத்திரர்களும் சூழும்படியாகவும், கிளைகள் விரிந்தாற்போல சினேகிதர்களும் பக்கங்களி லிருக்கும்படியாகவும், வாசனையானது எவ்விடமும் ஓங்காநிற்கும் புயங்களையுடைய அண்ணலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை அடிக்கடி ஆசிர்வதித்து மெத்தையின் மேற்சாய்ந்த மாத்திரத்தில் தேகவியோகமாகி விண்ணுலகம் போய்ச் சேர்ந்தான்.

 

837. பொருத்து மெய்மொழி மாதவ னிறந்தவப் போதிற்

    கருத்த ழிந்திரு கண்கள்முத் துகுத்திடக் கலங்கி

    வருத்த முற்றவர் சிலரணி வயிறலைத் தலறிச்

    சிரத்தி னிற்கதுப் பறப்பறித் தெறிந்தனர் சிலரே.

53

      (இ-ள்) சத்திய வார்த்தைகளையே பொருந்தாநிற்கும் மகாதவத்தையுடையவனான அவ்விசுறாவென்னும் பண்டிதன் அவ்வாறு தேகவியோகமான அந்தச் சமயத்தில் சிந்தனையற்று இரண்டு கண்களும் முத்தைப் போலு நீரைச் சொரிந்திடும்படி கலக்கமடைந்து துன்பத்தைப் பொருந்திய பேர்கள் சிலர். அழகிய வயிற்றினி லறைந்து சத்தமிட்டுத் தலையின் கண்ணுள்ள உரோம முழுவதும் அறும்படிபிடுங்கி வீசினபேர்கள் சிலர்.