பக்கம் எண் :

சீறாப்புராணம்

325


முதற்பாகம்
 

சமுத்திரத்தின்கண் பிறந்த தேவாமிர்தத்தைப் போலும் விருந்தை எடுத்துக் கொடுத்தான்.

 

833. ஆகங் கூர்தர விருந்தளித் தவரவர் கரத்திற்

    பாகு பாளிதம் வெள்ளிலைச் சுருளொடும் பகிர்ந்து

    தேக மெங்கணுஞ் சந்தனக் குழம்பினாற் றீற்றி

    யோகை கூர்தர நன்மொழி யெடுத்தெடுத் துரைத்தான்.

48

     (இ-ள்) அவ்வாறு சரீரமானது கூரும்படி யாவர்களுக்கும் விருந்து கொடுத்து அவரவர்களுடைய கைகளில் துவர்க்காயும் பாளிதமும் வெற்றிலைச் சுருள்களுடன் பகிர்ந்து அவர்களின் தேக முழுவதையும் சந்தனக் குழம்பினால் மெழுகிச் சந்தோஷமிகுக்கும்படியாக நன்மை பொருந்திய பலவித வார்த்தைகளை யெடுத்தெடுத்துச் சொல்லினான்.

 

834. தெரியு மெய்மறைக் குரியவ விச்செக தலத்தில்

    வரிசை நந்நபி முகம்மதை யொருநொடிப் பொழுதும்

    பிரியல் வாய்மொழி மறுத்திட லிப்பெரும் பேறுக்

    குரியர் நீரல ரெவரென அபூபக்கர்க் குரைத்தான்.

49

     (இ-ள்) அன்றியும், அறியாநிற்கும் சத்தியவசனங்களையுடைய வேதங்களுக்குரித்தானவரே! நீவிர் இந்தப் பூலோகத்தின்கண் சங்கைபொருந்திய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை விட்டும் ஒரு க்ஷணநேரமாயினும் அகலாதீர். அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை மறுக்காதீர். இந்த நபிபெருமானவர்களின் பெரிய வூதியமனைத்திற்கும் சொந்தமானவர் நீரேயல்லாமல் வேறே யாவர்? ஒருவருமில்லரென்று அபூபக்க ரவர்களுக்குச் சொன்னான்.

 

835. சுரிக ருங்குழல் வெண்ணகைப் பசியமென் றோகை

    வரிவி ழிக்கதி சாமனை மைசறாத் தன்னை

    யருகி ருத்திநன் மொழிபல வெடுத்தெடுத் தறைந்தான்

    விரியு நூற்கடற் செவிமடுத் துண்டமெய்த் தவத்தோன்.

50

     (இ-ள்) பின்னர் விரிந்த சாஸ்திரங்களென்னுஞ் சமுத்திரத்தைக் காதுகளினால் நிறைத்தருந்திய உண்மையாகிய தவத்தினை உடையவனான அவ்விசுறாவென்னும் பண்டிதன் முறுக்கைப் பெற்ற கரிய கூந்தலையும், வெள்ளிய பற்களையும் இரேகைகள் படர்ந்த கண்களையுமுடைய பசிய மென்மையவனான மயில்போலும் சாயலைக் கொண்ட கதீஜா அவர்களின் வீட்டின் கண்ணுள்ள மைசறாவென்பவனை அழைத்துப் பக்கத்திலிருக்கச் செய்து நன்மை பொருந்திய பலவித வார்த்தைகளை எடுத்தெடுத்துச் சொல்லினான்.