மவர
முதற்பாகம்
மவர்கள்
விரிந்த பிரகாசத்தையுடைய கலைகளோடும் வெள்ளிய சந்திரன் போன்ற தங்களது பாதங்களினால்
நடந்து சென்று இருளின்கண் புகுவதைப் போல, இந்தக் காபிர்களான சூதர்களின் வீட்டின்கண்
போய்ப் புகுந்தார்கள்.
938.
கள்ளவிழ் மரவத் திண்டோட்
காரணக் கடலே யன்ன
வள்ளலை யவர்கள் போற்றி
மாளிகை வயின்கொண் டேகித்
தெள்ளிய மணியிற் செய்த செவ்வியா
சனத்தி லேற்றி
வெள்ளிலை யடைக்காய் சந்தம்
விரைவின்வைத் திருந்தா ரன்றே.
38
(இ-ள்) அப்போது தேனானது
அவிழா நிற்கும் குங்குமப் புஷ்பத்தினாலான மலர்மாலை யணிந்த திண்ணிய புயங்களையுடைய காரணத்தினது
சமுத்திரத்தையொத்த வள்ளலாகிய நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களை அந்தச் சூதர்களாகிய காபிர்கள் துதித்துத் தங்களினது மாளைகையின்கண் கூட்டிக் கொண்டு
போய்த் தெள்ளிய இரத்தினங்களினாற் செய்த அழகிய ஓராசனத்தின் மீது ஏறியிருக்கும்படி செய்து
விரைவாக அவர்களின் முன்னர் வெற்றிலை பாக்கு சந்தனமாகிய இவைகளை வைத்துப் பக்கத்தி லிருந்தார்கள்.
939.
மைதவழ் குடையீ ரிந்த மனையிடைப்
புகுத யாங்கள்
செய்தவப் பலனோ முன்னோர் திளைத்தபுண்
ணியத்தின் பேறோ
வெய்திய பெற்றி யென்ன விசைந்தநன்
முகம னாகப்
பொய்திகழ் நாவால் வஞ்சம்
பொருந்திய மனத்தர் சொன்னார்.
39
(இ-ள்) அன்றியும், மேகங்கள்
தவழா நின்ற குடையினையுடைய முகம்மதானவர்களே! நீங்கள் இந்த வீட்டின் கண் வந்து நுழையும்படி
பொருந்திய இந்தத் தன்மையானது, நாங்களனைவர்களும் செய்யா நிற்கும் தவத்தினது பிரயோசனமோ?
அல்லது எங்களது முன்னோர்கள் செய்த தருமத்தினது பேறோ? என்று சொல்லிப் பொருந்திய நல்ல முகஸ்துதியாகப்
பொய்மையானது மாறாது பிரகாசியா நிற்கும் தங்களது நாவினால் கபடந் தங்கிய மனத்தை யுடையவர்களான
அந்தக் காபிர்கள் சொன்னார்கள்.
940.
நன்னய மொழிக ளாக நவிற்றியங்
கிருந்த காலை
வன்மனக் கொடிய காபிர் மனத்துறு
சூழ்ச்சி யாக
மின்னொளி சுரக்கு மாட மேனிலை
செறித்த கற்பாற்
சென்மெனக் கடைக்கண் ணாரச்
செப்பின னொருவன் சென்றான்.
40
|