பக்கம் எண் :

சீறாப்புராணம்

425


முதற்பாகம்
 

 மணம்புரி படலம்

 

கலிநிலைத்துறை

 

1097. குறைசி மன்னவ ருடனபுத் தாலிபுங் குழுமி

     நிறைசெய் மாமதி முகம்மதின் மணவினை நிலவ

     விறைவ ரியாவரு மறியவந் நகர்க்கெழின் முரச

     மறைக வென்றலு மெழுந்தனன் கடிமுர சறைவான்.

1

     (இ-ள்) குறைஷி வேந்தர்களோடு அபீத்தாலிபவர்களுங் கூடி நிறைவைச் செய்யா நிற்கும் பெருமை தங்கிய சந்திரனாகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விவாகச் செய்கையானது எவ்விடங்களிலும் பரவவும், அரசர்களனைவர்களும் அறியவும், இந்தத் திருமக்கமா நகரம் முழுவதிலும் அழகிய மணமுரசம் அடிப்பாயாகவென்று சொல்லிய மாத்திரத்தில் மணமுரசறையப்பட்ட ஒருவன் எழும்பினான்.

 

1098. ஒட்டை மீதினின் மணமுர சினையெடுத் துயர்த்தி

    விட்டு வெண்கதி ருமிழ்மணி மறுகிடை மேவி

    வட்ட வாருதிச் செல்வமொத் திந்நகர் மாக்க

    ளிட்ட மாயினி தூழிவாழ் கெனவெடுத் திசைத்தே.

2

     (இ-ள்) அவ்வாறு எழும்பிய அவன் மணமுரசை யெடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது ஏற்றி வெள்ளிய கிரணங்களை நானாபக்கங்களிலும் விட்டு உமிழா நிற்கும் இரத்தினவர்க்கங்களையுடைய வீதியின்கண் போய்ச் சேர்ந்து வட்டமான சமுத்திரத்தினது செல்வத்தை நிகர்த்து இந்தத் திருமக்கமா நகரத்தின்கண்ணுள்ள மனுஷியர்களனைவர்களும் சினேகமாய் இனிமையுடன் ஊழிகாலபரியந்தம் வாழ்வீர்களாக வென்று எடுத்துச் சொல்லி.

 

1099. ஆசி மாகுலத் தப்துல்லா மகனணி மறுவி

     வாச மெய்முகம் மதுபெறும் புதுமணக் கோலங்

     காசி லாவிதுக் கிழமையி னிரவெனக் காட்டிப்

     பாச முற்றவர்க் குரைப்பதுண் டெனப்பகர்ந் திடுவான்.

3