பக்கம் எண் :

சீறாப்புராணம்

642


முதற்பாகம்
 

தலைவர் மந்திரத் தலைவர்களின் வார்த்தைகளை விட்டு நீங்காத சிந்தையையுடையவனான ஹபீபென்று சொல்லும் வெற்றியைக் கொண்ட மன்னவனின் முன்னர் போயினார்கள்.

 

1707.போற்றி நின்றுகும் பிட்டணி யொதுக்கிவாய் புதைத்துத்

    தூற்று தேம்பொழின் மக்கமா நகரவர் தூதன்

    மாற்ற ருங்கதிர் வாயிலில் வந்தன னெனுஞ்சொற்

    சாற்றி னார்செழும் பொன்மழைக் கரதலன் றனக்கே.

49

      (இ-ள்) அவ்வாறு போயின அவர்கள் செழிய சொர்ண மழையைக் கொண்ட கைத்தலத்தை யுடையவனான அந்த ஹபீபரசனுக்கு அவனைத் துதித்து நின்று வணங்கி தங்களின் ஆபரண முதலியவைகளை ஒதுங்கும் வண்ணம் செய்து வாயைப் பொத்தி மதுவைச் சொரியா நிற்கும் சோலைகளையுடைய மக்கமாநகரத்தையுடையவர்களான அபூஜகில் முதலானோர்களால் அனுப்பப்பட்ட தூதனாகிய ஒருவன் நீக்குதற் கருமையான கிரணங்களையுடைய நமது வாயிலின்கண் வந்திருக்கின்றானென்னும் வார்த்தைகளைச் சொன்னார்கள்.

 

1708.கரைகொ ளாப்பெருஞ் சேனையங் கடனடுக் கடிதின்

    வரவி டுத்துக வென்றலும் வாயில்கா வலவர்

    விரைவி னேகியத் தூதனை விளித்துமின் னணிபூ

    ணரசர் நாயகன் றிருமுன மழைத்துவந் தனரால்.

50

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் சொல்லவே அதைக் கேட்ட ஹபீபரசன் அவனை விரைவாய்க் கூப்பிட்டுக் கரை கொள்ளாத அழகிய பெரிய சேனையாகிய இந்தச் சமுத்திரத்தின்கண் வரும்படி விடுங்களென்று ஆக்கியாபித்த வளவில் அவ்வாயிற் காப்போர்கள் சீக்கிரமாய்ச் சென்று அத்தூதனை அழைத்துக் கொண்டு பிரகாசமமைந்த ஆபரணங்களைத் தரித்த அரசரேசுரனான அவ்வரசனின் திவ்விய சந்நிதானத்தின் முன்னர் வந்தார்கள்.

 

1709.எதிர்ந்த தூதுவன் றரையினிற் றெண்டனிட் டெழுந்து

    முதிர்ந்த பேரவை யரசனை முறைமுறை பணிந்து

    பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத் திரத்தை

    பொதிந்த மென்றுகி லொடுந்திறற் புரவலற் கீய்ந்தான்.

51

      (இ-ள்) வாயிற் காப்போர்களால் அவ்வாறு கூட்டிக் கொண்டு வர அங்கு வந்து சந்தித்த தூதனாகிய அவன் பூமியின்கண் படுத்துச் சாஷ்டாங்கஞ் செய்து எழும்பி முற்றிய பெரிய சபையையுடைய ஹபீபரசனை வரிசை வரிசையாக வணங்கிப் பதியா நிற்கும் முத்திரையை விளங்கும் வண்ணம் செய்த அந்தக் கடிதத்தை அதை மூடிய மெல்லிய பட்டு வஸ்திரத்தோடும் வலிமையை யுடைய அவ்வரசனுக்குக் கொடுத்தான்.