|
முதற்பாகம்
1710.ஈய்ந்த முத்திரைப் பத்திர மதனையோ ரிளவல்
வாய்ந்த செங்கரத் தேந்திமுத்
திரைத்துகில் வாங்கி
யாய்ந்த பாசுர மனைத்தையுந் தெரிதர
வணியாய்ச்
சாய்ந்தி டாதபொன் மணிமுடி யவர்க்குரைத்
தனனே.
52
(இ-ள்) அவ்வாறு கொடுத்த முத்திரையை
யுடைய அந்தக் கடிதத்தை ஒப்பற்ற இளம் பருவத்தை
யுடையவனான ஒருவன் சிறப்புத்தங்கிய சிவந்த தனது
கைகளினால் தாங்கி அதிலுள்ள முத்திரையைக் கொண்ட
வஸ்திரத்தை வாங்கிவிட்டு ஆராயா நிற்கும்
வாசகங்களெல்லாவற்றையும் விளங்கும் வண்ணம்
தெரியும்படி பொன்னாற் செய்து இரத்தினங்கள் அழுத்தப்
பெற்ற சாயாத கிரீடத்தை யுடையவனாகிய அந்த
ஹபீபரசனுக்குச் சொன்னான்.
1711.வனைந்த பாசுர மனைத்தையும் வரன்முறை கேட்டுச்
சினந்த யங்குவே லவன்மன முறச்சிரந் தூக்கி
யினந்த னிற்பெரி யவர்மறை யவர்க்கெடுத்
தியம்பிப்
புனைந்த பொன்முடி மண்டப மாளிகை புகுந்தான்.
53
(இ-ள்) அப்போது அக்கடிதத்தின்கண்
சிறப்பித்து எழுதிய வாசகங்க ளெல்லாவற்றையும்
கோபமானது பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தை யுடைய அந்த
ஹபீபரசன் ஒழுங்காய்த் தனது காதுகளினால் கேள்வியுற்று
மனமானது பொருந்தும் வண்ணம் தலையை உயர்த்தித் தனது
கூட்டத்திலுள்ள பெரியவர்களுக்கும் வேதியர்களுக்கும்
அச்சமாச்சாரத்தை எடுத்துக் கூறி அலங்கரிக்கப்பட்ட
பொன்னினாலான சிகரத்தைக் கொண்ட உப்பரிகையை யுடைய
ஒரு மாளிகையின்கண் போய் நுழைந்தான்.
1712.தனித்தி ருந்தொரு மண்டபத் தரசர்க டமையு
நினைத்த சூழ்ச்சியை யுரைதரு நிருபர்க டமையு
மனத்தி னின்புற வழைத்தரு கிருத்திமும்
மறையின்
றொனித்த செய்தியு நிகழ்ந்ததுந்
தொகுத்தெடுத் துரைத்தான்.
54
(இ-ள்) அவ்வாறு போய் நுழைந்த அவன்
ஏகமாக இருந்துக் கொண்டு ஒப்பற்ற அம்மண்டபத்தின்கண்
மற்றும் அரசர்களையும் மனதில் எண்ணிய நுட்பத்தைக் கூறா
நிற்கும் மன்னவர்களையும் இருதயத்தின்கண்
இனிமையுறும்படி கூப்பிட்டுப் பக்கத்திலிருக்கச் செய்து
முன்னுள்ள தவுராத்து, இஞ்சீல், சபூறென்னும் மூன்று
வேதங்களினாலும் தொனிக்கப் பெற்ற சமாச்சாரத்தையும்
தற்போது நடந்திருக்கின்ற சமாச்சாரத்தையும் ஒழுங்காக
எடுத்துச் சொன்னான்.
|