|
முதற்பாகம்
1934. மக்கமா நகரக்
குறைசிகள் பலரு
மதியிலி யபூசகு லுடனிவ்
வொக்கலுந் துன்புற் றெழின்முகம் வெளிறி
யுள்ளுணர் நினைவறக் கருகித்
தக்கவ ரொருவர்க் குரைகொடுப் பதற்குத்
தங்களிற் றனிதடு மாறிப்
புக்கிடம் புகுதற் கருநெறி யறியாப்
புல்லறி வினிற்சில புகல்வார்.
184
(இ-ள்) அன்றியும், அந்த மக்கமா
நகரத்தினது குறைஷிகளாகிய பலரும் அறிவில்லாதவனான
அபூஜகி லென்பவனோடு இந்தக் குடிகளும் வருத்தமடைந்து
அழகிய தங்களின் முகங்களானவை வெளிறுதலுற்று மனசினது
அறிவின் நினைவானது அற்றுப் போகும் வண்ணம் கரிந்து
மேலோரொருவர் வினாவும் வினாவிற்கு ஏகமாய் விடை
கூறுவதற்குத் தங்களில் தடுமாற்றமடைந்து தாங்கள்
புகுமிடம் புகுவதற்கு அரிய வழியுந் தெரியாது கீழ்மையான
அறிவாற் சில வார்த்தைகளைக் கூறுவார்கள்.
1935. வருடமீ ரைம்பா
னறுபதின் மேலு
மிருந்துமா மறைகளைத் தெளிந்த
புருடரா திபனிம் முகம்மதிங் கியற்றும்
புன்மைவஞ் சனையிடத் தடைந்து
திருடர்போல் விழித்தா னென்னிலிந் நிலத்திற்
றெளிமறை தெளிந்தசிந் தையினு
மிருடரா திருத்த லரிதெனச் சினந்த
விடரொடும் படிறெடுத் திசைப்பார்.
185
(இ-ள்) மகத்தாகிய வேதங்களைக்
கற்றுத் தெளிந்த மானிடாதிபனான இந்த ஹபீபென்பவன்
நூற்றி யறுபது வருடத்தின் மேலும் இப்பூலோகத்தின்கண்
ணிருந்தும் இந்த முகம்மதென்பவன் இவ்விடத்தில்
செய்யும் கீழ்மையான வஞ்சனையினிடத் தடைந்து
கள்ளர்களைப் போல விழித்தா னென்றால் இந்தப்
பூமியின்கண் தெளிவான வேதங்களைக் கற்றுத் தெளிந்த
மனசிலும் இருள் தராமல் இருப்பது அரிய காரியமென்று
கோபித்த துன்பத்தோடும் பொய்களை எடுத்துப்
பேசுவார்கள்.
1936. விறற்பெரும் படைகொண்
டபூசகல் விளைக்கும்
வினைகளு மிகுந்ததந் திரமு
மறற்பல கொழிப்ப நதிசுரத் தழைத்த
அகுமதி னிடத்தினி லணுகாப்
|