முதற்பாகம்
மானுக்குப்
பிணை நின்ற படலம்
அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
2052. குயினிழல் பரப்பச்
செவ்விக் கொழுந்தொடை நறவஞ் சிந்தும்
வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து
வள்ளல்
செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்
பயிர்வளர்ந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்.
1
(இ-ள்) மேகங்களானவை குடையினது
நிழலை விரிக்கும் வண்ணம் அழகிய செழிய புஷ்ப மாலைகள்
மதுவைச் சொரியும் ஒள்ளிய வயிர மலையைப் பார்க்கிலும்
மிகப் பருத்து ஓங்கிய திண்ணிய தோள்களையுடைய வள்ளலான
நமது நாயகம் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குற்றமற்ற
புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது இனிய சொல்லாகிய
செழிய மழையைப் பொழிந்து தீனுல் இஸ்லா மென்னும்
மார்க்கப் பயிரை வளர்ந்தேறச் செய்து அன்புடனிருக்கும்
நாளில்.
2053. அரியினஞ் செறிந்த போன்ற
அறபிகள் குழுவி னாப்ப
ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்
திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி
மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச்
சார்ந்தார்.
2
(இ-ள்) செம்மறி யாட்டுக் கூட்டம்
நெருங்கியதை நிகர்த்த அறபிகளின் கூட்டத்தினது
மத்தியில் மிகவும் ஒப்பற்ற சிங்கத்தைப் போன்று
யாவற்றையுஞ் சொந்தமா யுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த
ஆலாவின் தூதுவராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வளத்தைக் கொண்ட
அழகிய அந்த மக்கமா நகரத்தினது எல்லையை விட்டு மகன்று
செழிய மேகங்களைத் தனது சிகரத்தின்கண் சுமந்து வாசனை
தங்கிய புஷ்பங்கள் அடரப் பெற்ற சோலைகள் வளைந்த
ஒருமலையிற் போய்ச் சார்ந்தார்கள்.
2054. கொன்றையுங் குருந்துங்
கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தெற்றித்
துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்
மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண்ணே
சென்றன ரெறிக்குங் காந்திச் செவ்விமெய் முகம்ம
தன்றே.
3
|