பக்கம் எண் :

சீறாப்புராணம்

768


முதற்பாகம்
 

      (இ-ள்) இவ்விடத்தில் நெடியவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவர் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வந்தார்கள். இனிப் பூமியின்கண் இவ்வேடனால் நமது உடலுக்கும் உயிருக்கும் யாதொரு முடிவில்லை. நாம் நமது கன்றையும் கண்களினாற் பார்ப்போமென்று அந்நபிகட் பெருமானவர்களை ஒரு நொடி நேரம் வரையிலாவது தனது இமைகளை மூடாமல் கண்களினாற் பார்த்துக் கொண்டே கிடந்தது.

 

2061. பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியரைத் தருவி னீழன்

     மருப்புடைப் படலைத் திண்டோண் மன்னவ ருடனும் புக்கி

     நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்

     றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்.

10

      (இ-ள்) அவ்விதம் கிடக்க அந்த மலையின்கண் நெருங்கிய கல்லின் சார்பில் பொருக்குக ளமைந்த அரையைக் கொண்ட மரத்தினது நிழலில் வாசனையானது அதிகரிக்கப் பெற்ற புஷ்பமாலைகள் தங்கிய திண்ணிய புயங்களையுடைய அரசர்களோடும் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் புகுந்து நெருப்பின்கண் வாட்டிய மாமிசத்தை வாயினா லருந்திக் கொண்டு நின்ற அந்த வேடனையும் செந்நிறத்தை யுடைய மானானது திரும்புதற்கரிதாய்க் கட்டுண்டு கிடப்பதையும் சிறக்கும்படி பார்த்தார்கள்.

 

2062. இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன

     மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு

     முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்

     றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.

11

      (இ-ள்) அவ்வாறு பார்த்த பரிசுத்தனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவர் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பூமியினிடத்து உருக்கிவிட்ட வெள்ளியானது பரவியதைப் போலும் மடியினின்றும் வெள்ளிய பாலானது சொரியவும், கூர்மையான கண்களின் நீரானது சிந்தவும், கலங்கிய சரீரமும் மனமும் காற்றூதும் துருத்தியை நிகர்த்திப் பெருமூச்சு விட்டுக் காலின்கண் கட்டிய கயிற்றினோடும் கிடக்க அதைச் சமீபித்து நின்றார்கள்.

 

2063. கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்

     பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி

     நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்

     பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.

12