பக்கம் எண் :

சீறாப்புராணம்

767


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், குறிய வெயர்ப்பானது தோற்றப் பெற்ற சரீரமும் செழிய மாமிசம் மணக்கப்பட்ட வாயும், பறிந்த சிரத்தினது விரிப்பும், மிகவும் அதிகரித்த கொலையினது கண்களுமாக அறபி இராச்சியத்திலுள்ள ஓர் அறபி வேடனானவன் காட்டிற் சென்று ஒரு மானைக் கோபத்துடன் தனது வலையின் கண் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தங்களின் கண்களினாற் பார்த்தார்கள்.

 

2058. குழைகுழைத் தெறியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்

     பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்

     செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்

     மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.

7

      (இ-ள்) அவ்வாறு பார்த்த செழிய மேகக் குடையை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குழைகளைக் குழைத்து வீசா நிற்கும் சிவந்த தேனை யுடைய செழிய புஷ்பச் சோலையைப் பார்த்திலர்கள். அந்த மலையினது சொரிகின்ற அருவிகளைப் பார்த்திலர்கள். பக்கத்திலுள்ள நல்ல நிழலைப் பார்த்திலர்கள். நெருங்கிய ஈத்த மரங்களின் செந்நிறத்தைக் கொண்ட காய்களை அம்மரங்கள் மழைபோலும் பொழிவதைப் பார்த்திலர்கள். அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் பக்கமாய் போனார்கள்.

 

2059. அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி

     சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்

     வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்

     பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.

8

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு போக அந்த மானானது காருண்யமான தடையாகக் கிடக்கப் பெற்ற கண்களும், அழகு பிரகாசிக்கின்ற வதனமும், ஒளிவு சிந்துகின்ற கஸ்தூரி வாசனை கமழும் காத்திரமும், சூலைக் கொண்ட மேகக் குடையுமாகிய இவைகளோடும் இங்கு வருவது பரிசுத்தனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தூதராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாமென்று தனது மனசின்கண் தேற்றமுற்றுத் துன்பமான துழக்கா நிற்கும் இருதயத்தோடும் சொல்ல ஆரம்பித்தது.

 

2060. நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த

     முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து

     கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா

     னொடிவரை யிமைமூ னோக்கியே கிடந்த தன்றே.

9