பக்கம் எண் :

சீறாப்புராணம்

874


இரண்டாம் பாகம்
 

2348. பாய்திரைப் பரவை சூழ்ந்த படிக்கணி திலத மாவி

     யாயமக் காவின் கச்சி லணிபெற வைம்பத் தாறு

     தேயமா னிடருங் கூண்ட திரளொடு மதீன மென்னுந்

     தூயமா நகரத் தோரும் வந்தனர் துலங்க வன்றே.

3

      (இ-ள்) பாயா நிற்கும் அலைகளை யுடைய சமுத்திரம் சூழ்ந்த இப்பூலோகத்திற்கு ஆபரணமும் கடிகையும் உயிருமாகிய திருமக்கமா நகரத்தில் ஹஜ்ஜிற்கு ஐம்பத்தாற் தேசத்து மானுஷியர்களும் அழகு பெறக் கூடிய கூட்டத்துடன் விளங்கும் வண்ணம் மதீன மென்று கூறும் பரிசுத்தத்தை யுடைய மகத்தான நகரத்திலுள்ளவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

 

2349. வால்வளைத் தரளஞ் சிந்தும் வாவிசூழ் மதீனா வாழு

     மேலவன்அசு அதென்னும் விறலுடைப் படலைத் தோளான்

     காலமூன் றுணரும் வேதக் கடலினுக் கெல்லை காணுஞ்

     சீலநந் நபியைக் காணச் சிந்தையிற் சிந்தித் தானே.

4

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்தோர்களில் வெள்ளிய சங்குகளின் முத்துக்களை அலைகளென்னுங் கைகளாற் கரைகளிற் சொரியா நிற்கும் தடாகங்கள் சூழ்ந்த திரு மதீனமா நகரத்தில் வாழும் மேன்மையை யுடையவனான அசுஅதென்று கூறும் வெற்றியையுடைய மாலையை யணிந்த தோளினன் வருங்காலம், நிகழ்காலம், செல்கால மென்னும் முக்காலங்களையும் தெரிந்த வேதச் சமுத்திரத்திற்குக் கரை காணும் அறிவினையுடைய நமது நபிகட்பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தெரிசிக்கும் பொருட்டுத் தனது மனதின்கண் நினைத்தான்.

 

2350. தன்னுயி ரென்ன நீங்கார் தலைமையி னுரிய தோழர்

     பன்னிரு வருக்கு நேர்ந்த பண்புட னெறிகள் கூறிப்

     பின்அக பாவென் றோதும் பெருந்தலத் துறைந்து காட்சி

     மன்னிய முகம்ம தின்றண் மலர்ப்பதம் வந்து கண்டார்.

5

      (இ-ள்) தனதுயிர் போலும் நீங்காதவர்களான தலைமைத் தனத்தின் உரிமையை யுடைய சினேகிதர்கள் பன்னிரண்டு பேருக்கு அவ்வாறு தான் உடன்பட்ட விதத்தோடு பல சன்மார்க்கங்களைப் போதித்துப் பின்னர் அகபா வென்று கூறும் பெரிய தலத்தின்கண் தங்கிக் காட்சி பொருந்திய நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் குளிர்ந்த தாமரை மலரை யொத்த பாதங்களை வந்து தெரிவித்தார்கள்.