பக்கம் எண் :

4வலம்புரி ஜான்


மூன்றாம் பதிப்பிற்கான முகபடாம்!

-ஞானபாரதி வலம்புரி ஜான்

  சிட்டுக்குருவி  ஒன்று  தன்  குட்டை  அலகால்  வான மண்டலத்தையே வரைந்துகாட்ட முற்பட்டதுபோல,    நாயகத்    திருமேனியின்    நயமான  வாழ்க்கையை வசன கவிதையாய் நான் வழங்க முற்பட்டேன்.

  இந்தக் காவியத்தை நான் நிறைவாக்குகிறபோது, அன்றிருந்த அரசாங்கம், அவதூறு வழக்கு ஒன்றில் என்னைச் சிறைப்பிடித்தது. வந்தவரோ இஸ்லாமான காவல்துறைக்  கண்காணிப்பாளர்.  "இன்று  வெள்ளி...  என்  தொழுகை  கூட   முற்றுப்பெறாத  நிலையில்  நாயகத்தை  வரைந்து  காட்டும்  நல்ல   உள்ளத்தை  நோகடிக்கிறேனே"  என்று அவர் கலங்கினார். "கடமையைச் செய்க என்று தான் கருணை நபி மொழிந்தார்" என்றேன்.

  உழுத நிலம் போல தாம் உருக்குலைந்தாலும் தம் உயிர்க் கொள்கைகளை விட்டு  விடாத  நாயகத்    திருமேனியின்  நலந்தரும்   வாழ்வை   நான்   வியர்வை    சிந்தாமலும் வேதனைப்படாமலும் எழுதிவிடக் கூடாது என்கிற இறைவனின் அளவில்லாக் கருணையை நினைத்து அன்று ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் அரும்பியது.

  நாயகம்  எங்கள்  தாயகம்  இரண்டு  பதிப்புகளைக் கண்டபிறகு சமுதாயச் சுடர் திருமிகு  எஸ்.எம்.இதாயத்துல்லா  அவர்களின்  முயற்சியால்  அவரது ஆசாத் பதிப்பகம் மூன்றாவது பதிப்பென்று முத்திரைப் பதிப்பாக இத்தரைக்கு இதனைத் தருகிறது.

  விதவையின் வெளிறிப் போன நெற்றியாக இருந்தாலும், நிலவையே கிள்ளி நெற்றிப்பொட்டாக்கி விட வேண்டும் என்கிற சமுதாயப் புரட்சி நெறியாளர், திருமிகு  எஸ்.எம்.இதாயத்துல்லா  அவர்கள். சமதர்ம அறிஞராக - சமரச ஞானியாக  -  எழுத்துச்  சித்தராக   இன்று   உருமாறி   வரும்   ஒரு  பெரும்   சக்திதான்   திருமிகு  எஸ்.எம்.இதாயத்துல்லா  அவர்கள ்.