சமதர்ம அறிஞராக - சமரச ஞானியாக - எழுத்துச் சித்தராக இன்று உருமாறி வரும் ஒரு பெரும் சக்திதான் திருமிகு எஸ்.எம்.இதாயத்துல்லா அவர்கள். நாயகத்தைப் போற்றிய இந்த நரனைத் தோள் கொண்ட மட்டும் தூக்கிக் கொண்ட இந்தப் பேராளரை வாழ்க என்றால் தான், ‘வாழ்க’ என்கிற வார்த்தையே வாழ்ந்திருக்கும். அவரே எழுத்தாளராக இருந்தும், என் எழுத்தைப் போற்றுகிற திருமிகு எஸ்.எம். இதாயத்துல்லா அவர்களின் இதயம், இலைவடிவம் ஆனது அல்ல; மலை வடிவம் ஆனது. சிங்காசனத்திற்கே தகுதியான இவருக்கு இப்போது சின்ன நாற்காலிதான் கிடைத்திருக்கிறது எனினும் எதிர்காலத்தில் இவரை இறைவன் கோபுரங்களுக்கு மேலே ஏற்றி வைப்பான் என்பதையும் குறிப்பாக உணர்த்த விரும்புகிறேன். தூக்கணாங் குருவிக்கூட்டில் தொலைந்து போன இந்த மின்மினியை ஆகாயத் தோப்பில் அத்திப்பூவாக திலைக்க வைத்த என் நெஞ்சம் நிறைந்த நேசர் எஸ்.எம்.இதாயத்துல்லாவிற்கு இறைவன் வரையின்றி வழங்குவானாக! அட்டை முதல் அட்டை வரை இக்காவியத்தை உள்வாங்கிக் கொண்டு, அரிய ஆலோசனைகளை அன்புள்ளத்தோடு அள்ளித் தந்து, பிழை நேராத வண்ணம் இதனைப் பிறப்பெடுக்க வைத்தவர், பேராளர் பைந்தமிழ்க் கவிஞர் கவிமாமணி திருமிகு இ.பதுருத்தீன் ஆவார். மரபுப் பாத்தியில் மத்தளம் கொட்டி வருவதுபோல, புதுக்கவிதைப் போக்கும், சங்ககால நோக்கும் கொண்ட வற்றாத வரலாற்று நதியான கவியரசர் இ.பதுருத்தீன் அவர்களுக்கு நன்றி. இந்நூலைத் தங்கள் இல்லங்களில் படித்து உணருகிற தமிழர்கள் எல்லோரும் வல்ல நாயனின் வலது கரத்திலிருந்து பேரருள் பெறுவார்களாக! என்றென்றும் அன்புடன் வலம்புரிஜான் |