இஸ்மி பத்திரிகை ஆசிரியர் கவிஞர் இ. பதுருத்தீன் அவர்களின் ஒப்புரை சொல் மயக்கத்தில் கருத்தைத் தொலைக்காமலும், கருத்து ஈர்ப்பில் கவிதையை இழக்காமலும் படைப்பதில் தேர்ந்த வார்த்தைக் கொள்முதல்வாதி திரு. வலம்புரிஜான் அவர்கள். பொன்னூஞ்சலில் ஆடுகின்ற வெண்புறாக்களைப் போல - இவரின் சொல்லூஞ்சல் நம்மைச் சொக்க வைக்கின்றன. மின்னலுக்கு, இருட்டுத்தான் மிடுக்கைத் தரும், ஆனால், இவர் வெளிச்சப் பொருளை எடுத்துக்கொண்டு மிடுக்குடன் மின்னியிருக்கிறார் என்பதால் இவரின் பேனா சிரசுக்குப் பிறைக் கிரீடம் சூட்டலாம். இவர், ‘சிறகு முளைத்த சின்ன இருட்டு’ என்று காகத்தைக் கண்டுபிடித்திருக்கும் கற்பனை ஞானத்திற்குப் பிறகு எனக்கு ஒரு புது வெளிச்சம் காக்கை மீது விழுந்துவிட்டிருக்கிறது. சாந்தமே உருவான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபம் வருமா? வரும் என்கிறார். எப்படி? "முகம்மதுக்கும் எப்போதோ கோபம் வரும்; ஆனால், சொற்களுக்குப் பற்கள் முளைத்திருக்காது". அடடா, நபிகளாரின் குணாம்சங்களில் ஒன்றை - தங்கக் கம்பியாய்த் தட்டி நீட்டாமலும், ஒற்றை வைரக்கல் மூக்குத்தியாய் உருவம் சுருக்காமலும் தாலி அணியாய் அளவு ததும்பாமல் தந்திருக்கின்ற வலம்புரியாரின் விரலுக்கு முழுநிலவைக் கொண்டே மோதிரம் செய்துபோட வேண்டும். கஃபாவை நம் கண்முன் நிறுத்த விரும்புகிற வலம்புரியார் - உயிரின் புதையலான இதயத்தை உவமையாக்கி கஃபாவை உறையிலிட்டே உரைக்கிறார். இதயம் என்று வெறுமென விளித்திருந்தால் அதில் புதுமையொன்றும் பூத்திருக்காது. "ஒழுங்காய் இயங்கும் உடலின் இதயமாய்..." என்று மாரடைப்பு நேராத மகோன்னத சுட்டுதலாய் - இறையில்லமான கஃபா இன்றைக்கும் ஆரோக்கியத் துடிப்போடு இருப்பதை - இருக்கும் என்பதை உள்ளீடாய் உரைக்கிறார். ஒழுங்காய் இயங்காத உடலின் இதயம் பழுதுபடக் கூடியது. ஆனால், கஃபா உதயத்தின் இதயமல்லவா! இந்த |