உலகமெனும் உடல், ஒழுங்காக இயங்க கஃபாவைத்தானே இதயமாக ஏற்க வேண்டும்!
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் செல்வத்தையும், சிரேஷ்டத்தையும் ஒரே வார்த்தையில்
உட்புகுத்தி வலம்புரியார் வர்ணிக்கிறார்.
"கதீஜா அம்மா வெட்டி எறிந்தால் கால் நகமும் கூட விலைக்குப் போகும், அவ்வளவான
செல்வச் செழுமை!"
கால் நகமே விலைக்குப் போகுமென்றால்... கதீஜா நாயகியாரின் செல்வ, செல்வாக்கை
இதைவிடச் சிறப்பாகக் கவிதையில் ஜோடித்துச் சொல்லிவிட முடியாது.
செயலும் சொல்லும் சேர வாழ்ந்த நபிகளாரைப் போற்றிவிட்டு - சொல்லும் செயலும்
தோழமையுறாதாரை இவ்வாறு சு(ட்)டுகிறார் :
"செயலில் உயிர்பெறாத சொல் - குறைந்தபட்சம் வயதுக்கு வராத கிழவி; அதிகபட்சம்...
புதைக்க இடம் கிடைக்காத பிணம்!"
இந்த வார்த்தை வார்ப்படத்தை - நம் வாக்குறுதி வள்ளல்களான
அரசியல்வாதிகளுக்குச் சுலோகமாகச் சொல்லிக் காட்டப்பட்டால் - உலோகமான அவர்கள்
திருந்தி உருப்படியாவார்களே! உயர்படி சேர்வார்களே!
இஸ்லாம், மெள்ள, மெள்ள வளர்ந்தது என்பதைக்காட்ட - கம்பளச் சொற்களை நெய்யாமல்
- மணப்பெண் முகம்தெரியும் மஸ்லீன் சொற்களால் நெய்துகாட்டுகிறார் :
"குழாயிலிருந்து சொட்டுகிற தண்ணீர் நேரம் எடுத்துக் கொண்டாலும் நிச்சயமாய்ப்
பானையை நிறைப்பது போல இஸ்லாம் வளர்ந்தது!". இந்த உருவகப் பாலமுது நம்
மனப்பானையையும் நிறைத்து விட்டதே!
எரிமலைக் குழம்பில் இரோஜாப் பூவொன்று மிதந்து வந்தது போன்ற அதிசயிக்கத்
தக்க அழகிய உவமைகள், இந்நூல் முழுவதும் நுங்கும் நுரையுமாகப் பொங்கி
வழிகின்றன.
"குறைசியர் கொடி மண்சோறு தின்றது" - என்றும் "இஸ்லாமியக் கொடி இறக்கைக்
கட்டிப் பறந்தது" - என்றும்
வலம்புரிஜான் அவர்கள் பறக்கவிட்டிருக்கின்ற இந்நூற் கொடி, புலமையாளர்களையும்
அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
வலம்புரியாருக்கு இறைவா, மேலும் நலம்புரி! இலகுபேசி : 596 1783 சென்னை - 600 081 - கவிஞர் இ. பதுருத்தீன் |