முதற் பதிப்பிற்கு அணியாய் அமைந்தவை... இது சுவன தேசத்தின் சொந்த அலைவரிசை ! -எஸ்.எம். இதாயத்துல்லா எம்.ஏ.,டி.ஜே.எல்.,எல்.பி.இ., தலைவர் : இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை. உலக அறிஞர்களின் ஒருமித்த கருத்தில் உன்னதமான ஒரு நூறு பேரில் முதன்மையானவர், முகம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். அவர்களின் உண்மைமிகு வரலாற்றுக் கற்பூரக் கவிதை நாற்றுகளை ஜப்பானிய அறிவியல் முறையில் கவனமாய் விதைத்த வசன காவியம் இது. வள்ளல் நபி வரலாற்றை வரைந்தவர் பலர். வார்க்கப்பட்ட வளமான மொழிகள் பல. முதல் மனிதன் மொழிந்த தன்னேரில்லாத தமிழ்மொழியில் கருத்துக்களாய், கவிதைகளாய் வடித்தவர் பலர். ஆனால் காலத்தே கவிதைப் பேழையாய் வார்க்கப்பட்ட வலம்புரியாரின் நாயகம் எங்கள் தாயகம் என்னும் ஓவியம், நானிலம் போற்றும் நடையில், முதன்மையாய், முதிர்ந்ததாய் மக்கள் நெஞ்சத்தில் மகுடம் ஏற்று நிற்கும் என்பது மாறாத உண்மை. இறையருளும் மறையருளும் முறையாய்ப் பெறாதவர் முயன்றாலும் கறையின்றி எழுத முடியாத காவியம் இது. நிறையருளும் இத்துறையருளும் நீக்கமறப் பெற்றதனால் இதை முடிக்கும் பேறு பெற்றார், பெருமை மிகு வலம்புரியார். மேலோர் போற்றும் மேன்மைமிக்க நபிகள் வாழ்வதனைச் சீறா தந்த செம்மல் உமறு தொட்டார்; துலக்கினார்; தொடரவில்லை. அது தொடர்கதையாய் ஆகிவிடாமல் நாயன் நலம்புரிந்ததனால் நயமாய் முடித்தார் வலம்புரியார். |