கற்பனைக் கலப்பின்றி காவிய நாயகரின் கால நிகழ்வுகளைச் சான்றுள்ள நிழற்படமாய், சத்தியத்தின் வார்ப்படமாய் செதுக்கிய வசன கவிதை இது. வானவில் காட்டும் வண்ணக் கோலங்களை விஞ்சும் வார்த்தை ஓவியங்களால் நபிகளார் வாழ்வுதனைத் தமிழ்த்தூரிகையால் வண்ணக் கலவை கொண்டு தீட்டிய சொற்சித்திரமிது. நுங்கு நுரையின்றி, தங்கு தடையின்றி, பொங்கும் நடையோடு பூரிக்கும் தெளிந்த பளிங்கு நீர் ஓடைநடை இது. புவனத்தின் அரிய மலர்களுடன் சுவனத்தின் புனித மலர்களையும் சீராய்ச் சரந்தொடுத்து சீமான்நபி புகழ் சேர்க்கும் பாமாலை இது. பூரணநிலவு பொழியும் பசுங்கதிர் என்னும் நூலெடுத்து தமிழ்த்தறியில் உவமை நெசவு செய்து கவிதைப் பொன்னாடையாக்கிப் பூமான் நபிகளின் புனித வாழ்விற்குப் போர்த்திய புகழ் ஆடையிது. நாயகச் செம்மலின் நல்வாழ்வைச் செம்பொன் நூலில், கத்தும் கடல்முத்துப் பவளத்துடன், பூமி உடல் மறைத்த வைரமணிகளை, நவரத்தினங்களை நன்றாய்க் கோத்த நம் தாயகம் போற்றும் தனிப்பெரும் எழுத்தாளனின் சுவன தேசத்தின் சொந்த அலைவரிசை இது. எழுதுகிறவனெல்லாம் எழுத்தாளன் அல்லன். எழுத்தினை ஆள்பவன்தான் எழுத்தாளன். இவ்வகையில் ஓர் கைவிரல் எண்ணிக்கையிலும் குறைவான எழுத்தாளர்களில் ஒருவர்தான் வலம்புரியார். சித்தம் தெளிவான சித்தர் இவர். அத்தோடு வார்த்தைகளை ஆளும்வகை அறிந்து சித்துவிளையாடி சீர்மிகு புதிய பொருள்களை வகுக்கும் வார்த்தைச் சித்தரே இவர். காலம் தமிழுக்கு வழங்கிய வலம்புரியாரின் வார்த்தைகள் மீது காதல் கொண்டோர், வான் புகழ் நபியின் வாழ்வதனைப் படிக்கின்ற வாய்ப்புத் தந்த வார்த்தைச் சித்தர் வாழ, அவர்தம் வாழ்வு செழிக்க வல்லோனை வேண்டுகின்றேன். |