பக்கம் எண் :

10வலம்புரி ஜான்


தூரத்தில் இருந்தே தொழுகிறேன்...

- கவிச்சிகரம் தஞ்சை வாசன்


   இந்த  பிரபஞ்சம்  தனக்குள்  நிகழும்  ரசவாதங்களைப் பேச கவிஞனின் உதடுகளைத்தான்  கடன்  வாங்கிக் கொள்கிறது. தமிழுக்கு இரண்டு பண்புகள் இருக்கின்றன. ஒன்று : தன்னைப் பாடுகிறவரை அது தன் அன்புக் கரங்களால் ஆசீர்வதித்து  சிகரங்களுக்கு  சிபாரிசு  செய்கிறது.  இரண்டு :  தன்னைச் சாடுகிறவரை  அது  பாதாளங்களுக்கு பரிந்துரைக்கிறது.  நடமாடும் வெளிச்ச வங்கியான  இந்த  வார்த்தைச் சித்தரையோ, தன்னை நிரப்பத் தக்க மனிதர் இவர்தான் என்று திசைகளின் காதுகளில் தீர்ப்பெழுதி வைத்திருக்கிறது.

   ஒரு  காவியத்தை  இயற்றி  முடிப்பது  என்பது  அக்னி  அடுப்பிற்குள் எரிந்துவிடாமல்  குளிர்காயவேண்டிய  நிர்ப்பந்தத்தில் நிறுத்தப்பட்ட இலவம் பஞ்சாய், படைப்பாளன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே இயலும்.

   நிகழ்காலத்தைப்  பாடுதல்  எளிது.  ஆனால்  காலக் காலண்டரிலிருந்து உதிர்ந்துபோன  தேதிகளை  ஒன்று சேர்த்து அந்த நாட்களின் தட்ப வெப்ப நிலையைக்கூட  அனுபவித்துப்  படம்பிடித்து,  அந்த  மனிதர்களின்  அந்த  நிமிட  மனவுணர்ச்சிகளோடும்,  அவர்களின் அன்றைய கலாசாரத்தோடும்,    பண்பாட்டோடும் கரைந்துபோய் எழுதுவது இருக்கிறதே, அது படைப்பாளன் மேற்கொள்கிற மாண்புமிகு அவஸ்தை.

   ஒரு மகா காவியத்தை எழுத ஒரு மகாகவிதான் வரவேண்டும். அது இது. அவர்... இவர்.

   இதோ...  இறந்துபோன  நூற்றாண்டை  எழுப்பி  வந்து  நம்  கண்ணுக்கு இந்நூல் மறுஒலிபரப்புச் செய்கிறது.

   தாஜ்மகாலின் பளிங்குக் கற்களில் ஜெருசலேம் முகம் பார்த்துக்கொள்கிறது. பிறையை,  சிலுவை  தன்  தலைமீது  சுமந்துகொண்டு  யுகத்தின்  முதுகில் பயணப்படுகிறது.  ஏதேன்  தோட்டத்திலிருந்து  ஒரு  குயில்,  குர்ஆனைக் கூவுகிறது!  வாழ்த்திற்குரிய  திரு வலம்புரிஜான் அவர்களின் பிரமிக்கத் தக்க பிரளயம் கண்டு ஆச்சரியக் குறியே ஆச்சரியப்படுகிறது!