பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்11


இந்தக்  காவியம்  நிஜத்தை  உயர்த்திப் பிடிக்கும் கற்பனை வார்த்தைகளின் கஜானா. ஒவ்வொரு உவமைக் கொக்கும் உட்கார்ந்துகொண்டு வாசிப்பவனின் உயிர் பிடிக்கிறது.

  இது  "தன்னைப் பிழிந்த தாளின் தவம்"  என்று எழுதியிருக்கிறார். இல்லை, இதுதான் இஸ்லாத்தின் தவம்; இதுதான் வரலாற்றின் வரம்.

  "சூரியனின்  மறுபக்கத்தில்  கூடுகட்டப்போன மழைக் குருவி" என்று இந்தக் காவியத்தைப் பற்றி இவர் எழுதும்போது இவரது விரல்களை என் இமைகளால் முத்தமிட எத்தனிக்கிறேன்.

  "மணல்வரிக் கவிதை"  என்றும்,  "சூரியச்  செலவாளியிடமிருந்து  நதிகளை சேமித்து  வைத்திருக்கும்  மண்வங்கி"  என்றும்,  "அம்மாவின் எதிர்ப்பதம்" என்றும்  பாலைவனத்தைப்  பற்றி  இவர்  எழுத்தோவியம் தீட்டுகிற போது ஓங்கிக் கைதட்டி என் கைரேகைகளே நசுங்கிப் போயின.

  கதிரவனின் கதிர்களை "சூரிய விழுதுகள்" என்று சொல்கிறபோது எனக்குள் வியப்புக்குறி வேர்விடுகிறது,

  "எங்கள்  ஊரில்  ஆயுதங்களை  சாமிகளுக்குத்  தந்துவிட்டு  ஆசாமிகள் நிராயுதபாணிகளாக  நிற்கிறார்கள்"  என்று   இவர்   எழுதும்போது  என்  உயிருக்குள்  ஒரு  கலவரம்   உற்பத்தியாகிறது;   என்  குருதிக்குள்  ஒரு  குருச்சேத்திரம்  நடக்கிறது.

  "போர்க்களத்தில்  வாள்,  காற்றுக்கு  வகிடெடுக்கிறது"  என்கிறார்.  தலை குனிந்து  பார்த்தால்  இவரது  இந்தக்  கற்பனையின் கண்களுக்கு வானத்தின் உச்சியே தட்டுப் படலாம்!

  "தலைக்குமேலே இடிக்கிற தரையைத் தாவி உடைக்கும் அவரைச் செடிகள், கேள்விக்குறியாய்  முதலில்  கிளர்ந்து  வியப்புக்குறியாய்  வீங்குதல் போல" இப்படியாக  இவர்  உவமைகளின் ஊர்வலம் நடத்துகிறபோது கடந்துபோன காளிதாசனையே பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வருகிறார். 

  இவரது  கவிதை  நடை,  பருவம்  ததும்பும் ஒரு தாவணி தேவதை சீராக அடியெடுத்து   வைக்கும்போது   எழுந்து  வருகிற கொலுசுச் சத்தத்தைப் போல குதூகலமூட்டுகிறது.

  "கண்களை  மூடிக்கொள்கிறேன்.  என்  முன்னால்  இருக்கும்  எல்லாம்  தெரிகிறது" என்ற இவரது தத்துவவெளிச்சத்தை தரிசிக்க நேர்ந்தால் புத்தனின் கண்களுக்கும் பார்வை போய்விடும்.