"இறுகிப்போன அண்ணலின் பல்வரிசைகள் காற்றைக்கூட கத்தரித்துப்போட்டன." அடப்பாவி! போர்க்களத்தில்கூட எப்படி உன்னால் பூக்களின் லிபிகளைப் பேசமுடிகிறது என்று மனசு விசிலடிக்கிறது. "விரல்களை விரித்தால் காற்றுக்கு வலிக்கும் என்று மூடிக்கொண்டே முகம்மது பிறந்தார்" ஐயா! இதை அழுத்தி எழுத மனமே இல்லை; சொல்லச்சொல்ல அச்சுக்கோர்க்க ஆகுமா? "சோலைநிழலில் வெளிச்சப் புள்ளிகள் விழுந்து குதித்தன" என்ற வரிகளால் இவரை நான் கம்பனின் தம்பியென்றே கணக்குப் போடுகிறேன். "ஆளில்லாக் காட்டுக்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை பார்ப்பதற்கு, அப்புறம் ஏன் பூக்கிறது?" என்ற இவரது அர்த்தம் குடித்த கேள்வி சந்தத்தோடு சிந்து பாடும்போது என் ஆன்மா என்னும் ஆர்மோனியத்தில் தத்தகாரம் பிறக்கிறது. முகத்தை "பொறிகளின் துறைமுகம்" என்கிறார். இந்த வரிகளின் ஆழத்தை வர்ணிக்க நான் முத்துக்குளிப்பவனாக ஆக முயலுகிறேன். "கதிரவன் மேற்குப் படித்துறையில் சலங்கைகளை அவிழ்க்கும் சாயங்காலம்" என்று இவர் அந்தியை வர்ணிக்கும் அழகைக் கண்டு பல கவிஞர்களின் மூளை இவரது கற்பனையைக் கடன்கேட்டுக் கடிதம்போடும். முகம்மது நபிக்குத் தாய்ப்பால் தந்து வளர்த்த தங்கநிலா ஹலீமா, நபிக்குத் திருமணமான பிறகு தேடி வருகிறார். அப்போது அன்னை ஹலீமாவிற்கு நாயகத்தின் மனைவி கதீஜா நாற்பது ஆடுகளைக் கொடுத்தனுப்புகிறார். அந்தத் தாயின் அப்போதைய உணர்வை இப்படி எழுதுகிறது இந்த வார்த்தைத் தலைநகரம். "ஹலீமாவின் மார்புகள் இறுதியாய் ஒருமுறை இறங்கி வந்தன." அப்பப்பா... மயிர்க்கால்களுக்குள் சிலிர்ப்பு வந்து சிம்மாசனம் போடுகிறது. இதைமட்டும் வாசிக்க முடிந்திருந்தால் கள்ளிப்பால் கூட தாய்ப்பாலின் தன்மைக்குத் தாவியிருக்கும், அரேபிய மண்ணில் பஞ்சம் வருகிறது. அப்போதைய நிலையை அறிவிக்க இவர் கையாண்டிருக்கிற வரிகள்... "நதிகள் புதைந்தன, புதைந்த நதிகளை புரட்டி எடுக்க மரங்கள் புகுந்தன." இதைப் படித்த பிறகு இன்றைக்குக் கவிஞன் என்று தன்னை உச்சரித்துக்கொள்கிற பலரின் உதடுகள் ஊமையாகும்; |