பேனாக்கள், மூடி என்னும் சிறைக்குள் ஆயுட் கைதிகளாக சரணடையும். பெண்குழந்தை பிறந்தால் புதைத்துவிடும் வழக்கம் கொண்ட அன்றைய அரேபிய மனிதர்களின் மனசாட்சியைக் காவுகொடுத்துவிட்ட செய்கையை "இதயங்களில் ஈரம்வற்றிவிட்டதால் மண்ணுக்குள் அதனைத் தேடினர்" என்றெழுதும் போதும், இதைவிட அற்புதமாய் இந்த சோகங்களைச் சொல்ல எந்தப் பேனாக்காரனின் சொல்லுக்கும் சக்தியில்லை என்பதை நான் உலகப் பந்தின் உச்சியில் நின்று வேண்டுமானாலும் ஓங்கி உச்சரிப்பேன். முகம்மது நபியின் வாழ்க்கை நதியில் ஒரு காவியக் குளியல் நடத்தியிருக்கிறார். இவரது சங்கீதம் காற்றின் வேர்வைக்கும் கவரிவீசும்; சூரியனின் வேர்களுக்கும் வெளிச்ச தானம் செய்யும். இவரது இந்தக் காவியப் படப்பிடிப்பில் எந்தக் காட்சியை வெட்டவும் விமர்சன சென்சாருக்கு வேலையில்லை. இந்தக் காவியத்திற்காக விருதுகள் இவரது விலாசத்தை விசாரிக்கும் என்பதும், இந்நூல், யுகம் கடந்தும் பேசப்படும் என்பதும் பட்டமரத்தின் உச்சிக்கிளையில் ஒற்றையாய் உட்கார்ந்திருக்கிற பச்சைக் கிளியைப் போல பளிச்சென்று தெரிகிறது. கூவத்தை ஒப்பிக்கும் பூக்களைப் பார்த்துக் கும்பிடு போடுகிற தமிழன்.. மானுடத்திற்கு எதிராக நிழலாய் நடந்து கொண்டிருக்கும் நீண்ட யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக உறைக்குள் என்றுமே உறங்காத வாளாய்... நீட்டிய கொடுக்கை மடக்காத தேளாய்... உலவும் இவரை ஒதுக்கப் பார்க்கிறான் என்பதை, "காகத்தின் சிறகுகளால் நீ என்னைக் கட்டியதால் அல்லவா ஓநாய்கள் கூடி என்னை ஓரங்கட்டப் பார்க்கின்றன" என்ற ஈர வரிகளால் எழுதியிருக்கிறார் ஞானபாரதி. ஒன்று சொல்வேன் வலம்புரியாரே... பூமியை நிராகரித்துவிட்டு நதி நகர முடியாது. உங்களை நிராகரித்து விட்டு வரலாறு வாழமுடியாது. இந்தத் தமிழ்மண்ணுக்கு இப்படி ஒரு காவியத்தை ஈன்று தந்ததற்காகவே அந்த அரேபிய மண்ணை நான் தூரத்திலிருந்தே தொழுகிறேன். இவரது சுவடுகளை காலம் தன் சுவடென்று கணக்கெழுதி வைக்கும் என்பதைப் பானைசெய்கிறவன் களிமண்ணை நம்புவதைப்போல கனமாக நம்புகிறேன். |