வரலாற்றுக்காக ஒரு முறை ! தெளிவான சிந்தனை பெற மற்றொரு முறை ! கவிதை அழகுக்காக இன்னொரு முறை ! - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது (இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம் - சென்னை.) கவிஞர்களையும் கவிதைகளையும் நேசித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைக் கவிதை வடிவில் வழங்கியிருக்கிறார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். அரசியல், இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்த வலம்புரியார், ஆன்மீகத்திலும் ஆழமான முத்திரை பதித்திருக்கிறார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை இதற்கு முன்னர் பல புலவர்களும், கவிஞர்களும் சிறந்த முறையில் வடித்துக் காலத்தால் அழியாத செல்வமாக விட்டுச் சென்றுள்ளனர். அந்த வரிசையில் இந்நூலும் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. நபிகள் நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படுத்தி - நபிகள் நாயகத்திற்கு முந்திய அரேபியாவில் தொடங்கி, நாயகத்தின் இறுதிப்பயணம் வரை - அழகுபட தொகுத்தளித்திருக்கிறார். நபிகள் நாயகம் ஒரு முழுப்புரட்சியாளர். வாழும்போதே வரலாறு ஆனவர். தம் கண்களை மூடிக்கொள்ளும் முன் தலைகீழ் மாற்றம் கண்ட பெருந்தகை. எனவே அவரது வரலாறு விரிவானது, ஆழமானது, பன்முகம் உடையது. இவை அனைத்தையும் ஒரு சிறு நூலில் கொண்டுவருவது இயலாத காரியம் எனினும் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்வுகள் விட்டுப் போகாமல் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை தெளிவாகவும், அழுத்தமாகவும், உணர்ச்சிப்பாங்கோடும் விவரிக்கிறார். இது அவருடைய நுண்ணிய பார்வையையும், நாயகத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டையும் உணர்த்துகிறது. |