பக்கம் எண் :

114


"உனைஎவ ரிடத்தும் விடுத்திடே!’ னென்றே

     உறுதியாய்க் கூறினான் மாலிக்

நினைத்ததே போன்று வந்தவர் அவனை

     நெருங்கியே நிகழ்த்திட லானார்!

 

"எங்களை ஏய்த்தே ஓடிய இவனை

     எப்படி நீங்களே அடைந்தீர்?

இங்கிவ னிருப்ப தறிந்திட வில்லை

     எங்கெல்லாம் மூன்றுநாள் அலைந்தோம்.

எங்களின் அடிமை இவன்பெரும் புளுகன்

     எம்மிடம் விடுத்திடு வீரே.

உங்களை ஏய்த்தும் மறைந்திடக் கூடும்

     உறுதியாய்க் கூறுவோம்!" என்றார்.

 

வந்தவர் வார்த்தை கேட்டதும் மாலிக்

     வாயடைத் திடஒரு வணிகன்

சுந்தர இளைஞன் தோளினை உலுக்கிச்

     ‘சொல்லடா உண்மையை!’ என்றான்.

சிந்தையிலேதும் களங்கமற் றவனாய்த்

     தெளிவுடன் எதனையோ எண்ணி

வந்தவர் தம்மை வேடர்முன் மானாய்

     மருண்டவன் நோக்கிட லானான்,

 

"உண்மையி லிவனும் அடிமையே எனினும்

     உரிமையை விடுத்திட விலைதான்

என்னவோ அதைநீ ரெம்மிடம் கேட்டால்

     ஈந்திடுவோ" மென மாலிக்

சொன்னதைக் கேட்டே "இவனது விலையைச்

     சொல்லுவீர் நீங்களே!" என்றார்.

புன்னகை புரிந்த மாலிக்கு அவர்க்குப்

     பொன்சில கொடுத்தனுப் பினனே.