ஏக்கம் உணர்ந்த தைமூஸே இடது புறத்தில் திரும்பிடவே நோக்கம் அறிந்து ஒரு சேடி நோட்ட மிட்டாள் பாங்கியரை. தூக்கம் கொண்டார் முகம்போலச் சோர்ந்து வந்த தோழியரோ ஊக்கம் இழந்தே ஏந்தலரை ஊமையர் போன்று நோக்கினரே! சுலைகா அழைக்கச் சென்றவர்கள் சோர்ந்து திரும்பி விட்டதனால் நிலையே அறிந்து தைமூஸின் நினைவே குலைய அசைவற்றுச் சிலையாய் இருந்தார் கணநேரம் சினந்தே எழுந்தார், தாமேபோய்ச் சுலைகா அழைத்து வந்திடவே தோழியர் தொடரச் சென்றனரே! சாந்தம் இழந்த தைமூஸே தாவிச் செல்லச் சுலைகாவோ கூந்தல் குலைய மதிமுகமே கவிழ்த்து நெஞ்சில் குடிபுகுந்த ஏந்தல் நினைவாய் இருப்பதையே எண்ணிப் பார்த்த தைமூஸே சாந்தம் அடைந்து சுலைகாவைத் தழுவி அணைத்து மொழிந்தாரே, "அன்புக் கடலின் ஒளிமுத்தே! அணையா விளக்கே! ஆரமுதே! பண்புப் பொழிலே சுலைகாவே, பகர்வே னொன்றே, கேளாயோ |