பக்கம் எண் :

117


முன்புன் கனவில் வந்தவனை

          முனைந்து பிடித்தே வந்தோமே,

     கண்முன் அவனைக் கண்டிடவே

          கடிதில் வருவாய்!" என்றாரே!

 

     தந்தை வார்த்தை செவியேற்றுத்

          தன்னை வாட்டும் கனவேதான்

     விந்தை ஏதும் செய்திடவே

          மீண்டும் தன்முன் தோன்றியதோ?

     எந்த உண்மையும் அறியாமல்

          எதிரே நின்ற தைமூஸை

     "எந்தாய்! இதுவும் கனவன்றே?"

          என்றாள் சுலைகா ஐயத்தால்!

 

     "கனவே அல்ல கண்மணியே,

          காண்ப தெல்லாம் மெய்யாகும்!

     உனையே காண அவரேதான்

          உள்ளம் துடித்தே நிற்கின்றார்;

     எனவே வருவாய் விரைவாக!"

          என்றார் தைமூஸ். இதைக்கேட்டு

     "முனமே அழைத்த தோழியரே

          முற்றும் மறைத்த தேன்?" - எனறாள்

 

     "வாட்டம் போக்கும் இசைகேட்க

          வாராய்! என்றார் மறுத்திட்டேன்,

     ஆட்டம் பார்க்க அழைத்தார்கள்

          அதுவும் வேண்டா மெனக்கென்றேன்.

     தேட்டம் வளர்த்த அவனேதான்

          தேடி வந்தான்!" எனச்சொன்னால்

     ஓட்டம் பிடித்து வாரேனோ?

          உணர்வா யுரைத்தாள் சுலைகாவே!