சுலைகாவின் சுயம்வரம் இயல்-26 புகழின் ஒளியால் புவியாவும் போற்றும் மன்னர் தைமூஸின் மகளின் நெஞ்சைக் கவர்ந்திடவே வந்த ‘ரூமி’ன் அதிபதியும் திகழும் ‘ஷாமி’ன் கோமகனும் சீமான் பலரும் சுலைகாவின் முகத்தைக் காணும் ஆவலுடன் முன்பின் நோக்கி இருந்தனரே! எதிரில் அமைந்த அரங்கினிலே எழிலின் சுவனத் தரம்பையராய்ப் பதின்மர் தோன்றிக் கைகூப்பிப் பணிந்தார் தைமூஸ் முகம் நோக்கி மதியை மனத்தை ஊடுருவும் வலிமை மிகுந்த இசைநாதச் சுதியில் மயங்கும் பாம்பெனவே சுழன்று ஆடினர் இருமாதர்! குயிலாய் ஒருத்தி சுலைகாவின் குலையா அழகைப் பாடிடவே மயிலாய்ச் சேடியர் இடைகுலுக்கி மயக்கும் வண்ணம் ஆடிடவே துயிலாப் பெண்கள் காதல் முகம் சோர்ந்து தேடித் தவிப்பதுபோல் துயராய் வந்தோர் எழில்பொங்கும் சுலைகா முகத்திற் கேங்கினரே. |