நறுமணமே நுகர்ந்தவளாய்ச் சுலைகாவே மனமகிழ்ந்து நாணி நின்றாள் "திருமணமே இன்றைக்கு செய்திடுவோம்!" எனமன்னர் திரும்பச் சொன்னார். மண்ணாளும் வேந்தர்மொழி எந்நாளும் போலன்றி மதித்து யூசுப் முந்நாளில் காண்பவரின் கண்ணாளும் எழிலரசி முகத்தைப் பார்த்தார்! இந்நாளில் தன்னினைவால் உருக்குலைந்த சுலைகாவின் இதயம் ஆள விண்ணாளும் நாயகனும் ஒப்புகின்றான், எனத்தேர்ந்து விருப்பம் கொண்டார்! யூசுப் - சுலைகா திருமணம் "இறைநியதி எப்படியோ அப்படியே சுலைகாவை ஏற்பே" னென்று மறைபுகழும் யூசுபு மனமொப்பிக் கூறியதை மன்னர் கேட்டுத் "தரைபுகழும் காதலராய்ச் சான்றாகும் தம்பதியாய்த் தகைமிக் கோராய் நிறைபுகழைப் பெற்றிடுவீர்!" எனக்கூறித் திருமணமும் நிகழ்த்தி னாரே! வையகத்து மாந்தருடன் வானகத்து விண்ணவரும் வாழ்த்துக் கூற, மெய்யகத்து ஆசியுடன் யூசுபினைக் கைபிடித்து மேன்மை பெற்று உய்வடைந்த சுலைகாவின் உயர்வுமிகு வாழ்வினுக்கு உவமை கூறத் தெய்வமொழிக் கல்லாது சிறுவன் மொழிக் கியலாது செகத்துள் ளோரே! முதல் பாகம் முற்றிற்று. |