பக்கம் எண் :

229


இறை வணக்கம்
 

இறைநியதி எதுவெனினும் ஏற்பே னென்ற

     எழில்நபியார் யூசுபின் உறுதி காத்து

நிறைமதியாள் சுலைகாவின் தாபம் தீர்த்து

     நிலையான பெருவாழ்வை நிகழ்த்தச் செய்து

மறைபுகலும் வரலாற்றை மாந்தர்க் கீந்து

     மறவாத படிப்பினைகள் மனத்தில் வைத்த

இறையவனின் பேரருளை ஏற்றிப் போற்றி

     எந்தமிழே ஏற்றமுறப் பாடுகின்றேன்!

 

சிறைபுகினும் குறைபுரியாச் சீல வாழ்வைத்

     தேர்ந்திட்ட நபியூசுப் திடநெஞ் சத்தை -

கறைபடியா வாழ்வுபெறக் காத்திருந்த  

     கட்டழகி சுலைகாவின் கடமை வாழ்வை,

நிறைவுபெறச் செய்த இறை நிகழ்த்திக் காட்டும்

     நிகரற்ற வரலாற்றை நிறைவு செய்யக்

குறைமறந்து அருளிறையின் கருணை யாவும்

     கூடிடவே கையேந்திப் பாடுகின்றேன்!
 

1-1-1980

சாரணபாஸ்கரன்