பக்கம் எண் :

230


மன்னரும் மணமக்களும்

  இயல் - 44

 

திருமணம் ஏற்ற செம்மலர் யூசுப்     

    சிந்தனை தந்தையை நினைக்க,

மறுமணம் பெற்ற மணமகள் சுலைகா        

    மன்னரின் பெருந்தயை நினைக்க,

இருவரும் இணைந்து இல்லறம் தொடங்க   

    ஏற்ற நாள் எதுவென ஆய்ந்து

ஒருகணம் நினைந்த மிசுரின்மா மன்னர்     

    உவகையோ டிருவரைக் கூர்ந்தார்!

 

‘நேரிய செயலால் நிமிர்ந்தநன் நடையும்    

    நெடும்பகை வென்றிடும் நகையும்

கூரிய நோக்கால் வரும்நிலை கூர்ந்து      

    குடிநலன் காத்திடும் தகையும்

சீரிய உணர்வும் சிந்தனைத் தெளிவும்       

    சேர்ந்துயர் யூசுபே, நும்பால்

கூறிய தேற்று சுலைகாவை மணந்து         

    கொண்டதைப் போற்றுவேன்’ என்றார்.

 

"நினைத்ததை முடிக்கும் நெஞ்சுரம் படைத்து

    நிலைதடு மாறிய சுலைகா

அனைத்தையும் படைத்த ஆண்டவன் அவட்கே

    அமைத்தக ணவரை அடைந்தாள்!

இனித்தடு மாற்றம் இருவர்க்கு மில்லை,      

    இகபரம் இரண்டுமே போற்ற

மனையறம் பேணும் மாதவம் புரிந்து        

    மகிழுவீர்’ என்றனர் மன்னர்.