பக்கம் எண் :

231


பெற்றவர் போலப் பிழையிலா வாழ்வைப்

   பேணிட வாழ்த்துரை கூறும்

கொற்றவர் தமையே நோக்கிய யூசுப்:

   ‘குலமுறை வளம்பெற வாழும்

நற்றவ மியற்றி நல்லறம் காக்க

   நாயனின் கருணையொன் றல்லால்

முற்றிலும் நம்மால் முடிவதோ இல்லை;

   முயற்சியும் அவனருள்!’ என்றார்.

 

மாசறும் யூசுப் வார்த்தையில் மகிழ்ந்த

   மன்னவர் சுலைகாவைக் கூர்ந்து

‘தேசுரும் வாழ்வைத் தேடிய மயிலே

   தேசமே நின்புகழ் கூற

யூசுபை மணந்தும் வாழ்வினை வென்றும்

   யோசனை இன்னமும் என்ன?

கூசுதல் வேண்டாம் பேசுக!’ என்றார்.

   குழறினாள் நாணிய சுலைகா.

 

‘ஒருவரை நினைந்துமற் றொருவரை மணந்து

   உள்ளமே சிதறிய ஒருத்தி

கருகிய மலராய் உதிர்ந்திடும் நாளில்

   கருதிய அவரே கை பற்றிப்

பெருகிடும் கண்ணீர் துடைத்திட வந்தால்

   பேசவும் முடியுமோ? அரசே,

இருவரும் இணைய இன்னருட் செய்தீர்

   என்றுமே மறந்திடேன்!’ என்றாள்.

 

‘சென்றதை மறந்து கிடைத்ததில் மகிழ்ந்து

   செய்கையில் சிந்தையில் சிறந்து

இன்றைய முதலாய் என்னரும் மகளாய்

   யூசுபின் இல்லறத் துணையாய்

நன்றுநீ வாழ்க!’ என்றனர் மன்னர்,

   நாணியே நகர்ந்தனள் சுலைகா.

‘என்னுடன் வருக அமைச்சரே!’ என்றார்

   யூசுபும் அரசரைத் தொடர்ந்தார்!


 
- - x - -