பக்கம் எண் :

232


மணப் பெண்ணின் குறை

இயல் - 45

 

கனவுதந்த காந்தனையே கணவ னாகக்

    கரம்பற்றும் களிப்பினிலே புவிமறந்து

மனம் நிறைந்த அமைதியொடு மஞ்சம் வீற்று

    மணவாளன் வருகைக்குக் காத்திருந்த

மணமகளார் சுலைகாவின் மெய் சிலிர்க்க

    மறைவிருந்த ஒருதோழி கண்கள் கொண்டு

மணமலரும் புத்தாடை அணிகள் கொண்டு  

    மற்றொருத்தி அங்குவந்தே அணியச் சொன்னாள்.

 

‘பேரரசர் உமக்களித்த பரிசில்’ என்று

    பிறிதொருத்திப் பேழையொன்றைக் கையில் தந்து

பாரறிய அரசவையில் மணத்தின் செய்தி

    பரவியது, அறிந்தவர்கள் மகிழ்ந்திட்டார்கள்!

ஊரறிய உலகறிய மணப்பெண்ணாக  

    உமையழைத்து வரப்பணித்தார் மன்னர்’என்றாள்.

பேறுமிகும் புதுவாழ்வைப் பெற்ற தாலே  

    பேச்சிழந்த சுலைகாவோ பெருமூச் சிட்டாள் !

 

‘தன்னமைச்சர் யூசுபினை ஒப்ப வைத்துத்

    தனிமையிலே மணம்பேசி முடித்திட்டாலும்

தன்னவையும் தன்னாடும் ஏற்றிப் போற்றித்  

    தனிப்பெருமை செய்திடவே எண்ணம் கொண்டு

மன்னவர்தம் மாளிகையில் விருந்து வைத்து

    மணவறையும் அமைத்திடவே ஆணையிட்டார்!

இன்றொரு நாள் எம்மோடு இருப்பீர், நாளை  

    யூசுபொடு இல்லறமே தொடர்வீர்!’ என்றாள்.