பக்கம் எண் :

233


நாளைவரை காத்திருக்கச் சொல்லி விட்டு

    நகைபுரியும் தோழியினை சுலைகா கூர்ந்து

‘நாளை என்ன, பலநாட்கள் தனிமை தாங்கி  

    நானிருப்பேன் எனக்கிதிலே பழக்கம்’ என்றாள்

‘வேளை வரும் வரையினிலும் காத்திருக்க

    வேண்டியவள் பெண்ணாவாள்’ என்ற தோழி

தோளணைத்து சுலைகாவின் கரங்கள் பற்றித்  

    துரிதமொடு ஆடையணி மாற்றச் சொன்னாள்!

 

‘முத்தணியும் புத்துடையும் அணிந்து விட்டால்

    முதிர்ந்திட்ட என்னிளமை திரும்பு மாமோ?

எத்தனையோ ஆண்டுகளாய் அவருக்காக

    இதயத்தைத் திறந்து வைத்துக் காத்திருந்தேன்;

அத்தனையும் பாழாக்கி ஆசைத் தீயை  

    அணைத்திட்டு மீண்டுமதை எரிய வைக்கும்

வித்தையினில் தேர்ந்த அவர் வரும் வரைக்கும்

    வீற்றிருப்பேன்!’ எனச்சுலைகா வெம்பலானாள்

 

‘பெண்ணிச்சை பெரிதெனினும் வெளிக்காட்டாது

    பேணுவதே பெண்மைக்குப் பெருமை சேர்க்கும்,

தன்னிச்சை காட்டிவரும் கணவர் முன்னே

    தாழாமல் பிணங்கித்தான் தழுவ லேண்டும்!

உன்னிச்சை மதிக்கின்ற உணர்வு பொங்க

    ஊடலுக்கும் மேலான தொன்று மில்லை!’

என்றிட்ட தோழியிடம் சுலைகா சொல்வாள்  

    ‘எனக்கிதிலே முன்தொடர்பு இலையே!’ என்று

 

‘முன்பழக்கம் பின்வழக்கம் என்று யாரும்  

    மொழியாமல் தானாகப் பயிலும் ஞானம்  

கண்டிடுவாய் விரைவினிலே, அந்த இன்பம்

    காணத்தான் அழைக்கின்றோம்; அரச இல்லம்

சென்றிடலாம் புறப்படுக!’ என்ற தோழி

    திரையிட்ட பல்லக்கை சுலைகா பக்கம்

கொண்டுவரப் பணித்திட்டாள், புதுமணப் பெண்

    கோலமிட்டு சுலைகாவும் புறப்பட்டாளே!