மன்னரின் இல்லம் சுற்றி
மக்களின் கூட்டம் சேர
முன்னவன் அருளை வேண்டி
முதியவர் வாழ்த்துக் கூற
தன்னரும் அமைச்ச ரோடு
தளபதி சூழ, மன்னர்
புன்னகை புரிந்து நிற்கப்
புதுமணப் பெண்ணும் வந்தாள் !
திரையிட்ட பல்லக் முன்னே
சென்றிட்ட அமைச்சர் யூசுப்
கரம் நீட்டி சுலைகா தன்னை
களிப்பொடு அழைக்க லானார் !
‘நிறையான இவ்வாழ் வுக்கே
நெடுங்காலத் தவமே செய்து
குறைவென்ற சுலைகா வாழ்க !’
கோஷமே செய்தார் மக்கள்.
நாணியே உடல் வியர்க்க
நகைதவழ் இதழ் நடுங்கக்
கூனியே தலைக விழ்த்துக்
குரிசிலின் நிழலில் ஒன்றி
தூணிடை நின்றி ருந்தத்
தோழியர் தோளிற் சாய்ந்து
மானென மருண்டாள், ஆங்கே
மங்கையர் பலரும் சூழ்ந்தார்.