முரசமே ஒலிக்க, சங்கம் முழங்கிட இருந்தோ ரெல்லாம் ‘அரசரே வாழ்க!’ என்று ஆர்த்தனர், அமைச்சர் யூசுப் கரங்களைப் பற்றி மன்னர் கனிவொடு நோக்க, நாட்டின் அரசியே சுலைகா தன்னை அமைச்சரின் கையில் தந்தாள் ! ‘கையொடு கை கலந்து கண்ணொடு கண் கலந்து மெய்யொடு மெய் கலந்து மென்மையும் ஆண்மை ஒன்றி நெய்யொடு நறுமணம் போல் நெஞ்சொடு நெஞ்சம் சேர்ந்து துய்யநம் அமைச்சர் யூசுப் சுலைகாவும் வாழ்க !’ என்றார் மன்னரின் வாழ்த்தைக் கேட்டு மலர் முக சுலைகா வெட்கி முன்னிலும் முகம் சிவந்து முறுவலிற் றலை கவிழ்ந்தாள் ! ‘தன்னையே வலிய தந்த தகைமிகு சுலைகா வுக்கு என்னதான் அமைச்சர் ஈவார் ?’ என்றனள் அரசி யாரே. ‘தன்னையே எனக்குத் தந்த தைமூஸின் புதல்வி கையில் என்னையே ஈந்தார் மன்னர் இன்னும்நான் ஈவ தென்ன ? ஒன்றுநான் தருவ தற்கு உண்டெனில் அதுதான் உள்ளம் இன்றதும் ஈந்தேன் !’ என்று யூசுபு இயம்ப லானார் ! |