பக்கம் எண் :

236


ஒருவரை யொருவர் நோக்க

      உவகையும் உணர்வும் பூக்க

இருவரும் இணைந்த காட்சி  

      இருப்பவ ரெல்லாம் நோக்க

பெருவரம் பெற்ற தேபோல்  

      பெருமிதம் சுலைகா கொள்ள

விருந்தின ரெல்லாம் உண்ண  

      வேண்டினார் மிசுரின் வேந்தர்.

 

பொருந்திடும் இதயத் துள்ளே  

      பொங்கிடும் சுவையே போன்று

விருந்திடும் தாதி யர்தம்  

      வேலையைத் தொடங்க, முன்னர்

விருந்தினில் கனியே என்று

      விரல்களைக் கீறி நின்றோர்

இருந்தனர், சுலைகா வோடு

      யூசுபும் காண லானார்!  

 

‘முன்பொரு முறையே யூசுப்  

      முகத்தினில் பார்வை வைத்து

இன்சுவைக் கனியே என்று

      எழில்விரல் அறுத்துக் கொண்டு

புண்தரும் குருதி யுண்ட

      பூவையர் போன்று இன்றும்

உண்பதை மறவீர்!’ என்று  

      உணர்த்தினாள் அரசி யாரே!

 

பார்வையில் மயக்கம் பாய்ச்சிப்

      பரிசமும் சுவையும் போக்கும்

பேரெழில் படைத்த யூசப்

      பெண்மயில் சுலைகா பக்கம்

பார்வையைத் திருப்ப’ அந்தப்

      பைங் கொடி சிலிர்க்க, மன்னர்

ஓர்கணம் குறுந கைத்தே  

      உவகையோ டுரைக்க லானார்: