‘உண்டுளம் களித்து நிற்கும் ஒப்பரும் நண்பீர், நாட்டின் தொண்டுளம் படைத்த யூசுப் சுலைகாவை மணந்த தாலே இன்றிருந் திரண்டு திங்கள் இன்பமே துய்க்க, ஓய்வு கொண்டிடச் செய்வோ’ மென்று கொற்றவர் அவையைக் கூர்ந்தார். தனக்கிரு திங்கள் ஒய்வு தந்திட்ட மன்ன ரின்பால் ‘எனக்கொரு துணையைத் தந்த ஏந்தலே எனது நன்றி வணக்கமே ஏற்று, என்னை வருத்திடும் துயரைச் சொல்ல இணங்குவீர்!’ என்றார் யூசுப்; ‘இயம்புவீர்!’ என்றார் மன்னர். "நாட்டினர் வாழ்வை எல்லாம் நசுக்கிடும் பஞ்சப் பேயை ஓட்டியே உயிர்கள் காக்கும் உயர்பணி யாற்றச் சொன்னீர்’ வாட்டிடும் கொடிய பஞ்சம் வருவதை மறந்து, இன்பக் கோட்டையில் ஓய்ந்து விட்டால் கொடிய தோர் குற்ற மாகும்." "உண்பதை குறைக்கச் சொல்லி உழைப்பினை பெருக்கச் சொல்லி வன்பசி தாங்கும் ஆற்றல் வளர்த்திடப் பழகச் சொன்னேன்; என்னுரை மறந்து மக்கள் இயங்கிடக் காணு கின்றேன் இந்நிலை மாற்ற நாமே இயற்றுவோம் புதிய திட்டம்" |