"வருந்திடச் செய்யும் பஞ்சம் வந்திடும் முன்னே நம்மில் இருந்திடும் உணவுப் பண்டம் எல்லாமும் அரசுக் காக்கி விருந்திடும் வழக்கம் போக்கி விளைந்திடும் தானி யங்கள் அருந்தன மாகச் சேர்க்க அவசரச் சட்டம் செய்வோம்!" "தேவைக்கு அல்லால் ஏதும் செலவிடல் குற்ற மாக்கித் தேவைக்குப் போக மீதம் சேமித்து வாழ்தல் நாட்டின் சேவையாய் - கடனாய்க் கொண்டு செயல்படத் திட்ட மிட்டுச் சாவையும் வெற்றி கொள்ளச் சபதமே செய்தல் வேண்டும்!" திருமணச் சுவையில் நெஞ்சம் திளைத்திடல் மறந்து இங்கு வரும்பெரும் பஞ்சம் நீக்கும் வழிமுறை காணக் கூறும் பெருமதி படைத்த யூசுப் பேசுதல் கேட்ட மன்னர் ‘ஒருவிதி செய்வோ!’ மென்று உணர்வினால் மவுனம் பூத்தார்! "ஒன்றுநாம் செய்தால், நம்மை உண்டிடத் தோன்றும் பஞ்சம் வென்றிடக் கூடும், யூசுப் விரும்புவ தெல்லாம் செய்ய இன்றைய போதே ஆணை இடுகிறோம்!" என்றார் மன்னர். ‘நன்றுநன்’ றென்றார் மக்கள் நடுவிலே யூசுப் சொன்னார்: |