இனிமைதரும் தனிமைக்கு ஏங்கினாற் போல் எல்லோரும் சென்றவுடன் அமைச்சர் யூசுப் மணவறையைத் தாளிட்டு, நடுங்கி நிற்கும் மணமகளின் தோள்தொட்டு மகிழ்ச்சி பொங்க "இனிநமக்குள் திரையில்லை, வாழ்வு முற்றும் இணைந்திருக்க இறையவனே இணைத்தான்!" என்றார் கனிபறிக்கும் நேரத்தே கண்ணீர் பொங்கக் கட்டழகர் காலடியில் சுலைகா வீழ்ந்தாள். கண்ணடியில் வீழாமல் உணர்வை முற்றும் காத்துயர்ந்த யூசுபின் கால்கள் பற்றிப் பொன்னடியை முத்தமிட்டு மெய்யு ணர்வைப் பொங்கவைத்த சுலைகாவைத் தாங்கித் தூக்கி கண்ணிமையில் நழுவிவரும் நீர்து டைத்துக் ‘கலங்குவதேன் பெண்மயிலே!’ என்றார் யூசுப் ‘என்னுணர்வை எப்படித்தான் இயம்பக் கூடும்?" எனமுணங்கி அவர்தோளில் சரிந்து விட்டாள். சரிந்தவளைப் பரிவுடனே இறுக ணைத்துத் தனிமைதரும் இனிமையினைச் சுவைக்கும் நேரம் வருந்துகின்ற காரணத்தைச் சொல்லச்’ சொன்னார். ‘வாய்திறந்து கூறுதற்கு ஆகா’ தென்றாள், ‘பொருந்துகின்ற உள்ளத்தைப் புரிந்து கொண்டால் போது’ மென்றார், ‘இதைக்காட்ட இத்த னைநாள் இருந்ததுமேன்?’ எனக்கேட்டு இதயம் விம்ம யூசுபின் காலடியில் மீண்டும் வீழ்ந்தாள். "பொன்கொடுத்து என்றனையே விலைக்கு வாங்கிப் பொய்யான உறவுக்குத் துடித்த தெல்லாம் இன்றைக்கு நினைக்கின்றேன், அதனால் பட்ட இன்னலையும் நினைக்கின்றேன், உனது உள்ளம் அன்றைக்கு விரும்பியதை இன்ற ளிக்க அணைக்கின்றேன் அடிவீழ்ந்து அழுவ தேனோ? ஒன்றுக்கும் கலங்காதே சுலைகா!" என்று உரிமையுடன் உடல்தழுவி மஞ்சம் சேர்த்தார். |